/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை அகற்ற கலெக்டரிடம் குடியிருப்புவாசிகள் முறையீடு
/
போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை அகற்ற கலெக்டரிடம் குடியிருப்புவாசிகள் முறையீடு
போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை அகற்ற கலெக்டரிடம் குடியிருப்புவாசிகள் முறையீடு
போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை அகற்ற கலெக்டரிடம் குடியிருப்புவாசிகள் முறையீடு
UPDATED : ஏப் 16, 2025 03:09 AM
ADDED : ஏப் 16, 2025 03:05 AM

திருவள்ளூர்:ராஜாஜிபுரத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் நிறுத்தியுள்ள, பறிமுதல் வாகனங்களை அகற்ற வேண்டும் என, குடியிருப்போர் நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
திருவள்ளூர் ஜே.என்.சாலை, எல்.ஐ.சி., அலுவலகம் எதிரில் உள்ள ராஜாஜிபுரத்தில் 'புட்செல்' எனப்படும் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இப்பிரிவு போலீசார், மாவட்டம் முழுதும் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் உணவு பொருட்கள் கடத்தப்பட்டால், அதை தடுத்து, குற்றவாளிகளை பிடித்து, கடத்தலுக்கு உதவும் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யும் வாகனங்களை, ராஜாஜிபுரம், பெரியார் சாலை, சிவ விஷ்ணு சாலை, ஹரேராம் நகர் மற்றும் சுவாதி நகர் பகுதி சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். அப்பகுதிகளில் உள்ள சாலையின் இருபுறமும், தனியார் வீட்டுமனைகளிலும் வாகனங்களை நிறுத்தியுள்ளனர்.
இதனால், புதிதாக வீடு கட்டுவோர் தங்களது இடங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற வேண்டுகோள் விடுத்தும், குடிமை பொருள் வழங்கல் போலீசார் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ராஜாஜிபுரம் குடியிருப்போர் நல்வாழ்வு சங்க தலைவர் முருகேசன் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை அலுவலகம், பல ஆண்டுகளாக ராஜாஜிபுரத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இக்காவல் நிலைய வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை மற்றும் தனியார் வீட்டு மனைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால், சாலையில் மாணவ - மாணவியர், பகுதிவாசிகள் கடும் சிரமப்படுகின்றனர். விஷ ஜந்துக்களால் சாலையில் நடமாட முடியாத நிலை உள்ளது. இரவு நேரத்தில் சமூக விரோதிகள் மதுக்கூடமாகவும், இதர செயல்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், தனியார் இடங்களில் நிறுத்தியுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்றாததால், வீடு கட்ட முடியாமல் இடம் வாங்கியோர் பரிதவித்து வருகின்றனர். இது தொடர்பாக, 10 ஆண்டுகளாக போராடியும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

