/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடியிருப்பு பகுதியில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
/
குடியிருப்பு பகுதியில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
குடியிருப்பு பகுதியில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
குடியிருப்பு பகுதியில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
ADDED : பிப் 24, 2024 01:21 AM

திருவள்ளூர்:கழிவுநீர் சூழ்ந்து, தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
திருவள்ளூர் ஒன்றியம், பெருமாள்பட்டு ஊராட்சி, ஸ்ரீராமுலுபுரம் பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் ஒன்றியம், பெருமாள்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட, ஸ்ரீராமுலுபுரம் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
கடந்த சில நாட்களாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், எங்கள் குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் குளம்போல் தேங்கி உள்ளது.
இதனால், எங்கள் பகுதியில் வசிப்போருக்கு, டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, எங்கள் குடியிருப்பு பகுதியில் தாங்கள் நேரடியாக வந்து ஆய்வு செய்து, அடிப்படை வசதியினை நிறைவேற்றித் தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கால்வாய் துார்வாரப்படுமா?
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் கீழ், கடந்த 21 மற்றும் 22 ம் தேதிகளில், பள்ளிப்பட்டு தாலுகாவில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், 21ம் தேதி இரவு கலெக்டர் தங்குவதற்காக, காக்களூர் காலனியில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு திட்ட கட்டடம் தயார் செய்யப்பட்டது.
இந்த கட்டடம் அமைந்துள்ள தெருவின் மேற்கு பகுதியில் இருந்து பாயும் கழிவுநீர் கால்வாய் நீண்ட காலமாக துார்வாரப்படாத நிலையில், கழிவுநீர் குட்டையாக தேங்கி நிற்கிறது.
கிராம வறுமை ஒழிப்பு திட்ட கட்டடத்தின் முன்பாக மட்டும், கிராவல் மண் கொட்டி கால்வாய் துார்க்கப்பட்டது. ஆனால், இந்த கட்டடத்தின் மேற்கு பகுதியில் தொடர்ந்து கழிவுநீர் குட்டையாக தேங்கி நிற்கிறது.
தெருவின் குறுக்கே புதைக்கப்பட்டுள்ள கான்கிரீட் குழாய்களும் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. மண் கொட்டி சமன் செய்யப்பட்ட கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும். நிரந்தரமாக கால்வாய் கட்டப்பட வேண்டும் என அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.