/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொண்டக்கரையில் கன்டெய்னர் மோதி பெண் பலி போக்குவரத்து போலீசாரை கண்டித்து சாலை மறியல்
/
கொண்டக்கரையில் கன்டெய்னர் மோதி பெண் பலி போக்குவரத்து போலீசாரை கண்டித்து சாலை மறியல்
கொண்டக்கரையில் கன்டெய்னர் மோதி பெண் பலி போக்குவரத்து போலீசாரை கண்டித்து சாலை மறியல்
கொண்டக்கரையில் கன்டெய்னர் மோதி பெண் பலி போக்குவரத்து போலீசாரை கண்டித்து சாலை மறியல்
ADDED : மார் 14, 2024 10:13 PM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் மனைவி அன்னபூர்ணா, 28. நேற்று காலை, மணலி புதுநகர் அருகே உள்ள நாப்பாளையம் செல்வதற்காக கணவருடன், 'டி.வி.எஸ்., ஜூபிடர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை அருகே செல்லும்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியது. இதில், அன்னபூர்ணா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சுகுமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
அன்னபூர்ணா விபத்தில் இறந்த சம்பவம் கவுண்டர்பாளையம் மற்றும் கொண்டக்கரை கிராமங்களுக்கு தெரிந்தது. அதையடுத்து, 100க்கும் மேற்பட்ட கிராமவாசிகள், சம்பவ நடந்த இடத்திற்கு சென்று மீஞ்சூர் - மணலி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தாவது: இப்பகுதியில், கன்டெய்னர் லாரிகள் செல்வதற்கு தனிப்பாதையும், பிற வாகனங்கள் செல்ல தனிப்பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, சாலையின் நடுவில், கான்கிரீட் தடுப்புகள் ஆங்காங்கே இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் இதில் முறையாக பயணிக்காமல் வளைந்து வளைந்து பயணிக்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒதுங்க வழியின்றி தடுமாற்றமான பயணம் மேற்கொள்கின்றனர்.
கடந்த மாதமும் இதேபோன்று விபத்து ஏற்பட்டதில் ஒருவர் இறந்தார். தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் கான்கிரீட் தடுப்புகளை அகற்ற வேண்டும் என அப்போது வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
இவ்வாறு தெரிவித்தனர்
தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈபடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
போலீசாரிடம், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள கான்கிரீட் தடுப்புகளை அகற்றவேண்டும். கொண்டக்கரை, கவுண்டர்பாளையத்தில் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும், கனரக வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால், மீஞ்சூர் - மணலி சாலையில், இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

