/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்கம்பங்கள் அகற்றாமல் சாலை விரிவாக்க பணி
/
மின்கம்பங்கள் அகற்றாமல் சாலை விரிவாக்க பணி
ADDED : பிப் 15, 2024 11:43 PM
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே, சிட்ரபாக்கம் பகுதியில், மின்கம்பங்கள் அகற்றாமல் நடக்கும் ஆரணி ஆற்றின் கரை அமைக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்கப் பணி, 'திராவிட மாடல்'பாணியில் இதுவும் ஒன்று என சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உருவாகும் ஆரணி ஆறு தமிழகத்தில் ஊத்துக்கோட்டை வழியே, பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பாலேஸ்வரம், ஆரணி, புதுவாயல், பொன்னேரி வழியே சென்று பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அடுத்த சிட்ரப்பாக்கம் கிராமத்தில், 2,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மழைக்காலங்களில் ஆரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், மழைநீர் கரையில் உள்ள சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளை மூழ்கடிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர வேண்டிய நிலை உள்ளது.
இதை தடுக்க நபார்டு திட்டத்தின் மூலம் ஆரணி ஆற்றின் கரையில், சிட்ரபாக்கம் பகுதியில் ஒரு கி.மீட்டர் துாரத்திற்கு கரை அமைத்து, சாலை அகலப்படுத்தி தார்சாலை அமைக்க, 3.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 'டெண்டர்' விடப்பட்டு பணி துவங்கியது.
கடந்தாண்டு, ஏப்., மாதம் துவங்கிய பணியை செப்., மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு, துவக்கத்தில் ஜரூராக பணிகள் நடந்தது தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. கரைகள் அமைக்கும் பணிகள் முடிந்து, தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கிறது.
மேலும் சாலை விரிவாக்கத்தில் மின்கம்பங்களை மாற்றி அமைக்காமல் பணிகள் நடக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணியில், மின்கம்பங்களை அகற்றாமல் ஒப்பந்ததாரர்கள் பணிகளை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. 'திராவிட மாடல்' ஆட்சியில் இதெல்லாம் சகஜம் என்பது போல் சிலர், 'கமென்ட்' அடித்து வருகின்றனர். இதேபோல், ஊத்துக்கோட்டை அடுத்த சிட்ரப்பாக்கம் பகுதியில் மின்கம்பங்கள் அகற்றாமல் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளது அரசு பணத்தை வீணாக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.