தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சோழவரம் அருகே 2 கிராமங்களில் கிராவல் மண் கொள்ளை!: நீர்நிலை, புறம்போக்கு நிலங்களிலும் கைவரிசை:அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக மக்கள் புகார்

சோழவரம் அருகே 2 கிராமங்களில் கிராவல் மண் கொள்ளை!: நீர்நிலை, புறம்போக்கு நிலங்களிலும் கைவரிசை:அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக மக்கள் புகார்

சோழவரம் அருகே 2 கிராமங்களில் கிராவல் மண் கொள்ளை!: நீர்நிலை, புறம்போக்கு நிலங்களிலும் கைவரிசை:அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக மக்கள் புகார்


UPDATED : செப் 04, 2026 04:22 PM

ADDED : செப் 04, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2026 04:22 PM ADDED : செப் 04, 2026 04:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

காவேரிராஜபுரம், வேணுகோபாலபுரம் ஆகிய இரண்டு கிராமங்களில், குவாரிகள் நடத்த அரசு அனுமதித்த பட்டா நிலங்களில் மட்டுமின்றி, அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்வழித்தடங்களிலும், மர்ம கும்பல் கிராவல் மண் கொள்ளை நடத்திய வருவதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஆத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ். இவர், திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரம் கிராமத்தில், நான்கு இடங்களில் உள்ள, 6.47 ஏக்கர் பட்டா நிலத்தில், கிராவல் மண் எடுக்க கனிம வளத்துறையிடம், கடந்த ஜனவரியில் அனுமதி பெற்றார்.

அரசு விதிமுறைகளின்படி, தரைமட்டத்தில் இருந்து, 2 மீட்டர் ஆழம் வரையில், 6.47 ஏக்கர் பரப்பளவில் மண் எடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதேபோல், திருவாலங்காடு ஒன்றியம், வேணுகோபாலபுரம் கிராமத்தில், 2 ஏக்கர் பரப்பளவில், கிராவல் மண் எடுக்க, மதுரையை சேர்ந்த ரகுவரன் என்பவருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மேற்கண்ட இரு கிராமங்களிலும், விதிகளை மீறி மண் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து, அரசு புறம்போக்கு நிலங்களிலும், நீர்நிலை பகுதிகளிலும் சட்டவிரோதமாக கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக, கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, காவேரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

எங்கள் கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், நெல், பூ, சிறுதானியம் என, 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

விவசாய நிலங்களின் அருகே, கிராவல் மண் குவாரிக்கு அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர், விதிகளை மீறி, அனுமதி அளிக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்திலும், சட்டவிரோதமாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்.

சட்டவிரோதமாக, 5 ஏக்கர் பரப்பளவிலான ஆறு இடங்களில், 3 முதல் 6 மீட்டர் வரையிலான ஆழத்திற்கு, பொக்லைன் இயந்திரம் உதவியுடன், சட்டவிரோதமாக மண் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது, பல ஏக்கர் பரப்பளவில், 10 அடிக்கு மேல் கிராவல் மண் எடுக்கப்பட்டு உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயத்திற்கு நீரின்றி போகும் அபாயம் உள்ளது.

குவாரி செயல்படும் இடங்களில், அதிகாரிகள் கண் துடைப்புக்கு மட்டுமே ஆய்வு செய்கின்றனர். அவர்களுக்கு உரிய முறையில், 'கவனிப்பு' செய்வதால், அவர்கள் கண்டுகொள்வதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேணுகோபாலபுரம் மக்கள் கூறியதாவது:

எங்கள் கிராமத்தில், ஒப்பந்ததாரருக்கு சொந்தமான, 2 ஏக்கர் பரப்பளவு இடத்தில் மட்டுமே மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், அனுமதிக்கப்பட்ட இடம் மட்டுமின்றி, அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் ஓடைக்கால்வாய்களில், 2 முதல் 3 மீட்டர் ஆழத்திற்கு, 100 மீட்டர் பரப்பளவில், இரண்டு இடங்களில் மண் எடுத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

மஞ்சாகுப்பம் ஏரிக்கு செல்லும் ஓடைக்கால்வாய் பகுதியிலும், அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டுள்ளதால், 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. அரசு நிலத்தில் மண் கொள்ளையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

காவேரிராஜபுரம் மற்றும் வேணுகோபாலபுரம் ஆகிய இரண்டு கிராமங்களில், விதி மீறி மண் கொள்ளையடிக்கப்பட்டு, அதன் வாயிலாக பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அளவு மீறி குவாரியில் கிராவல் மண் கொள்ளை நடப்பதாக, திருவள்ளூர் கலெக்டர் மற்றும் கனிமவளம், காவல், வருவாய் துறை என பல்துறை அதிகாரிகளிடம், பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அக்கிராம மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

குவாரிகள் முடக்கம் மாவட்ட கனிமவளம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: காவேரிராஜபுரம் கிராமத்தில் வந்த புகாரை அடுத்து, கனிமவளம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். விதிமீறல் இருந்ததையடுத்து, நேற்று முன்தினம் குவாரியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. வேணுகோபாலபுரம் கிராமத்தில் செயல்படும் குவாரியில் விதிமீறல் இருக்கும்பட்சத்தில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். காவேரிராஜபுரம் மற்றும் வேணுகோபாலபுரம் கிராமத்தில் அளவீடு செய்து பார்த்ததில், அனுமதிக்கப்பட்ட சர்வே எண்கள் மட்டுமின்றி, அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மண் எடுக்கப்பட்டுள்ளது. கனிம வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us