ADDED : மார் 28, 2026 06:08 AM
திருத்தணி: திருத்தணி அருகே உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வந்த, 2 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, திருத்தணி தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழி தலைமையில், மூன்று பறக்கும் படையினர், மூன்று நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் ஒரு வீடியோ கண்காணிப்பாளர் அடங்கிய குழுவினர், 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பொன்பாடி சோதனைச்சாவடியில் தமிழ்ச்செல்வன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ராவின் 'இனோவா' கார் வந்தது.
பறக்கும் படையினர் சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்த, 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைத்தனர். பின், திருத்தணி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
