தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆரணி ஆற்றில் வெள்ள தடுப்பு பணிக்கு தேவையான நிதி ரூ.295 கோடி:அரசிடம் கருத்துரு சமர்ப்பித்து காத்திருக்கும் நீர்வளத் துறை

ஆரணி ஆற்றில் வெள்ள தடுப்பு பணிக்கு தேவையான நிதி ரூ.295 கோடி:அரசிடம் கருத்துரு சமர்ப்பித்து காத்திருக்கும் நீர்வளத் துறை

ஆரணி ஆற்றில் வெள்ள தடுப்பு பணிக்கு தேவையான நிதி ரூ.295 கோடி:அரசிடம் கருத்துரு சமர்ப்பித்து காத்திருக்கும் நீர்வளத் துறை


UPDATED : செப் 11, 2026 04:45 AM

ADDED : செப் 10, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2026 04:45 AM ADDED : செப் 10, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:மழைக்காலங்களில் ஆரணி ஆற்றின் கரை உடைந்து, கிராமங்களில் வெள்ள நீர் உட்புகுவதை தடுக்க, கரையை பலப்படுத்தி, வெள்ள தடுப்புச்சுவர் அமைக்க, 295.50 கோடி ரூபாய் தேவைப்படுவதாக, நீர்வளத் துறையினர் மதிப்பீடு தயாரித்துள்ளனர். அதற்கான கருத்துருவை அரசிடம் சமர்ப்பித்து, நிதி ஆதாரம் கேட்டு நீர்வளத் துறையினர் காத்திருக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 115.28 செ.மீட்டர். அவற்றில், வடகிழக்கு பருவமழை காலமான, அக்., முதல் டிச., வரை, 60.41 செ.மீட்டர் மழை பெய்யும்.

ஆனால், 2020ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை, வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாக இருந்தது. அதாவது, 2020ம் ஆண்டு 13.51 செ.மீட்டர், 2021ல் 50.53 செ.மீ., 2023ல் 18.43 செ.மீ., 2024ல் 26.27 செ.மீ., 2025ல் 15.60 செ.மீட்டர் மழை அதிகமாக பெய்தது.

இதன் காரணமாக, கூவம், ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில், ஏ.ரெட்டிபாளையம், ஆலாடு, தத்தமஞ்சி, விச்சூர், பெரும்பேடுபாக்கம், வஞ்சிவாக்கம் ஆகிய பகுதிகளைச் சுற்றிலும், 5 கி.மீட்டர் துாரம் வரை, வெள்ளத்தால் மிக அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது.

ஆரணி ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள மேற்கண்ட பகுதிகளில், ஆற்றின் கரை உடைந்து, வெள்ள நீர் 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய நிலங்களிலும், வீடுகளைச் சுற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், நெல் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சேதத்தை சந்தித்ததுடன், வீடுகளும், சாலைகளும் பாதிக்கப்பட்டன. மேலும், அவ்வப்போது ஏற்படும் புயல் சமயங்களிலும், பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கிராமங்களைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து வருகிறது.

இதனால், வெள்ள நீரில், கிராம மக்கள் பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்படுகிறது.

மாவட்டத்தில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஆரணி ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள பொன்னேரி வட்டத்தைச் சேர்ந்த ஆறு இடங்களும், 17 பகுதிகளும், அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும், 19 கிராமங்கள் குறைந்த பாதிப்பு ஏற்படும் பகுதிகளாகவும், மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது.

மிக அதிகளவில் பாதிப்பு ஏற்படும் ஆறு இடங்களில், ஆரணி ஆற்றின் கரையை உயர்த்தியும், கான்கிரீட் வெள்ள தடுப்புச்சுவர் அமைக்கும் பணியில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலை, தற்போது வரை தொடர்கிறது.

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையை ஒட்டி, நீர்வளத்துறையினர் ஆரணி ஆற்றின் கரையோரம், பல்வேறு பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர். இதுவரை, ஏ.ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி, சோமஞ்சேரி, ஆண்டார்மடம் ஆகிய கிராமங்களில், கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் அமைத்து, கரைகள் பலப்படுத்தப்பட்டன.

மேலும், ஏ.ரெட்டிப்பாளையம் தடுப்பணை பலப்படுத்துதல், ஆலாடு பகுதியில் மனோபுரம் - கொளத்துார் கிராமங்களில் வெள்ள தடுப்புச்சுவர் அமைத்தல், உடைப்பு ஏற்படும் பகுதியில் ஆற்றின் கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு, 295.50 கோடி ரூபாய் தேவைப்படுவதாக, நீர்வளத்துறையினர் மதிப்பீடு தயாரித்துள்ளனர்.

அதற்கான கருத்துருவை அரசிடம் சமர்ப்பித்து, நிதியை எதிபார்த்து காத்திருக்கின்றனர். அரசு நிதியை ஒதுக்கினால் தான், வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மற்றும் விவசாய நிலங்களை பாதுகாக்க முடியும்.

இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரி கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காலங்களில், பொன்னேரி வட்டத்தில் ஆறு இடங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, ஏ.ரெட்டிபாளையம் - சோமஞ்சேரி, மனோபுரம், கொளத்துார் மற்றும் கம்மார்பாளையம், தத்தமஞ்சி, விச்சூர், பெரும்பேடு குப்பம், வஞ்சிவாக்கம் ஆகிய பகுதிகளில், உடைப்பு ஏற்படும் இடங்களில் கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆலாடு ஊராட்சி, மனோபுரம், கொளத்துார் கிராமங்களில் ஆரணி ஆற்றின் கரையை பலப்படுத்தி, வெள்ள தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். பெரும்பேடு குப்பத்தில் ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும்.

மீஞ்சூர் - பழவேற்காடு சாலையில், பிரளயம்பாக்கம் கிராமம் அருகில், சிறுபழவேற்காடு காலனியில் கான்கிரீட் வெள்ள தடுப்புச்சுவர் அமைக்கவும், ஆற்றின் கரைகளையும் பலப்படுத்த வேண்டும். மேலும், ஏ.ரெட்டிப்பாளையம் தடுப்பணையை பலப்படுத்த வேண்டும்.

அப்படி அமைத்தால், நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்பணிகளுக்காக, மொத்தம் 295.50 கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பீடு தயாரித்து, அரசிடம் கருத்துரு சமர்ப்பித்துள்ளோம். அரசு நிதி வழங்கினால் தான், வெள்ள தடுப்பு பணிகளை நிறைவேற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Image 1618111


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us