/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோதனைச்சாவடியில் 'ரெய்டு' ரூ.5.44 லட்சம் சிக்கியது
/
சோதனைச்சாவடியில் 'ரெய்டு' ரூ.5.44 லட்சம் சிக்கியது
சோதனைச்சாவடியில் 'ரெய்டு' ரூ.5.44 லட்சம் சிக்கியது
சோதனைச்சாவடியில் 'ரெய்டு' ரூ.5.44 லட்சம் சிக்கியது
ADDED : செப் 26, 2025 10:37 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, தமிழக எல்லையில் அமைந்துள்ள தமிழக போக்குவரத்து துறை சோதனைச்சாவடியில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 5.44 லட்சம் ரூபாய் சிக்கியது.
சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தமிழக -- ஆந்திர எல்லையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. இங்கு, போக்குவரத்து துறை, போலீஸ், கலால், வனத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்து துறை சார்பில், வாகன சரக்குகளின் எடை, ஆவணங்கள் சரிபார்த்தல், 'பர்மிட்' வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் மார்க்கத்தில் ஒன்று, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் மார்க்கத்தில் ஒன்று என, இரு போக்குவரத்து துறை சோதனைச்சாவடிகள் இயங்கி வருகின்றன.
இந்த சோதனைச்சாவடிகளில், அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக தொடர் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான குழுவினர், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் இரு பிரிவுகளாக பிரிந்து, இரு சோதனைச்சாவடிகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
அலுவலகம், ஆவணங்கள் அறை, அட்டை பெட்டிகள், பைக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கணக்கில் வராத 5 லட்சத்து 44,500 ரூபாய் சிக்கியது.
சோதனையின் போது, இரு சோதனைச்சாவடிகளில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள், குமார், ராஜன் ஆகியோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சார்பில், தமிழக போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.