ADDED : மார் 24, 2026 08:50 PM

திருத்தணி: ஆவணம் இல்லாமல் வாகனங்களில் கொண்டு சென்ற 7.75 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருத்தணி அடுத்த சிவாடா கிராமம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை ஆந்திராவின் சிவாடா நோக்கி சென்ற காரை சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள் இல்லாமல், 5.86 லட்சம் ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது.
அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், திருத்தணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைத்தனர். தேர்தல் அலுவலர் கனிமொழி, திருத்தணி அரசு கருவூலகத்தில் பணத்தை ஒப்படைத்தார்.
கும்மிடிப்பூண்டி பெரியபாளையம் அடுத்த வடமதுரை கிராமத்தில், மாநெல்லுார் சிப்காட் தனி தாசில்தார் மணிகண்டன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, தாமரைப்பாக்கம் பகுதியில் இருந்து ஆரணி நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.
அதில், உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற, 85,490 ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் உத்தரவின்படி, தலைமையிடத்து துணை தாசில்தார் கனகவல்லியிடம் ஒப்படைத்தனர்.
பொன்னேரி பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட தச்சூரில் நேற்று, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி உதவி பொறியாளர் குருபிரசாத் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற 'சுசூகி டிசயர்' காரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் பயணித்த, சென்னை எம்.கே.பி., நகரைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர், ஆவணங்களின்றி வைத்திருந்த, 1.04 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, பொன்னேரி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். நேற்று ஒரே நாளில் மொத்தம் 7.75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
