/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சொகுசு பஸ்சில் கத்தை கத்தையாக பணம்... ரூ.2.15 கோடி!: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது அம்பலம்
/
சொகுசு பஸ்சில் கத்தை கத்தையாக பணம்... ரூ.2.15 கோடி!: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது அம்பலம்
சொகுசு பஸ்சில் கத்தை கத்தையாக பணம்... ரூ.2.15 கோடி!: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது அம்பலம்
சொகுசு பஸ்சில் கத்தை கத்தையாக பணம்... ரூ.2.15 கோடி!: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது அம்பலம்
ADDED : செப் 22, 2024 01:49 AM

திருவள்ளூர்:ஐதராபாதில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்தில், ஹவாலா பணம் 2.15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த கடத்தல் சம்பந்தமாக ஒருவரை பிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள், பணம் எடுத்து வரப்பட்ட பின்னணி குறித்து, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர - தமிழக எல்லையோரம், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, உ.பி., உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், இந்த சோதனைச்சாவடி வழியாக, தினமும் தமிழகத்திற்குள் நுழைகின்றன.
போலீசார், போக்குவரத்து, மதுவிலக்கு கலால் உள்ளிட்ட துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வழியாக, கஞ்சா, மது பாட்டில்கள் அதிகளவில் கடத்தப்படுவதால் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஐதராபாதில் இருந்து சென்னை நோக்கி வந்த 'இன்டர்சிட்டி' நிறுவன சொகுசு பேருந்தை நிறுத்தி, வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
பயணியரின் உடைமைகள் வைக்கும் இடத்தில் சோதனையிட்ட போது, பெரிய அட்டை பெட்டி பார்சல் இருந்தது.
கஞ்சாவாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், பெட்டியின் ஓரத்தில் கத்தியால் கிழித்து பார்த்தபோது, 500 ரூபாய் நோட்டு கட்டு இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, சொகுசு பேருந்தை பறிமுதல் செய்த போலீசார், மாற்று பேருந்து வரவழைத்து, பயணியரை சென்னைக்கு அனுப்பினர். அந்த பெட்டியை பறிமுதல் செய்து, ஆந்திராவின் நெல்லுாரைச் சேர்ந்த சுரேஷ், 33, என்ற, பேருந்து ஓட்டுனரை போலீசார் விசாரித்தனர்.
ஐதராபாதில் இந்த பார்சலை ஏற்றிய நபர், அதில் பொம்மைகள் இருப்பதாக கூறி, மொபைல் போன் எண் ஒன்றை ஓட்டுனரிடம் கொடுத்துள்ளார். பெட்டியை எடுத்துச் செல்வதற்காக, ஓட்டுனருக்கு 500 ரூபாய் கொடுத்துள்ளார்.
மாதவரம் சென்றதும், அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட நபர் பார்சலை எடுத்து செல்வார் எனவும், அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பார்சல் அனுப்பியவர் மற்றும் பெறுபவரை பிடிக்க வேண்டும் என்பதற்காக, ஐதராபாத் நபர் கொடுத்த எண்ணிற்கு, சொகுசு பேருந்து ஓட்டுனரை வைத்து, போலீசார் பேச வைத்தனர்.
ஓட்டுனர், 'பழுது காரணமாக, எளாவூர் அருகே பேருந்து நிற்கிறது. பயணியர் மாற்று பேருந்தில் சென்றுவிட்டனர். நீங்கள் நேரில் வந்து, உங்கள் பார்சலை எடுத்துக் கொள்ளுங்கள்' என, பேசினார்.
தொடர்ந்து போலீசார், சம்பந்தப்பட்டவரின் மொபைல் போன் எண்ணிற்கு 'கூகுள் மேப் லோகேஷன்' வாயிலாக, ஓட்டுனரின் இருப்பிடத்தை அனுப்பினர். அதை பார்த்து, பார்சல் எடுக்க டூ - வீலரில் வந்த நபரை, எளாவூரில் மறைந்திருந்த போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சூரஜ்பூரி, 33, என்பதும், பணத்தை பார்சலில் பேருந்தில் அனுப்பியவர் ஐதராபாதில் துணிக்கடை நடத்தி வரும் பக்தாராம், 45, என்பதும் தெரியவந்தது. சென்னையில் இடம் வாங்குவதற்காக, பக்தராராம் அந்த பணத்தை அனுப்பியதாகவும், சூரஜ்பூரி தெரிவித்துள்ளார்.
ஹவாலா பணமாக இருக்கலாம் என்பதால், சென்னை வருமான வரித்துறையினருக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
பின், ஓட்டுனர் சுரேஷ், சூரஜ்பூரி மற்றும் பறிமுதல் செய்த அட்டை பெட்டி பார்சலை, சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறையினரிடம், போலீசார் ஒப்படைத்தனர்.
வருமான வரித்துறை அலுவலர் பிரதீப்குமார், தாசில்தார் சரவணகுமாரி மற்றும் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் ஆகியோர் முன்னிலையில், அட்டை பெட்டி பிரித்து, அதில் இருந்த பணம் எண்ணப்பட்டது.
அதில் மொத்தம், 2.15 கோடி ரூபாய் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத, கணக்கில் வராத பணம் என்பதால், வருமான வரித்துறையினர் அதை எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.