மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை விரைவில் முடிக்க ஆர்.டி.ஓ., அறிவுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை விரைவில் முடிக்க ஆர்.டி.ஓ., அறிவுறுத்தல்
UPDATED : ஜூலை 09, 2026 04:37 PM
ADDED : ஜூலை 09, 2026 04:20 PM

திருத்தணி:மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை, விரைவில் நடத்தி முடிக்க வேண்டும்,” என, திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.
திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய மூன்று தாலுகாக்களில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல், 2027ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது.
இதற்காக, மூன்று தாலுகாக்களிலும், கடந்த 6ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள், வருவாய் துறை ஊழியர்கள் ஆகியோருக்கு, கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நேற்று திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில், மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் மற்றும் மேற்பார்வையாளருக்கான பயிற்சியை, மாவட்ட கள பயிற்சியாளர் லீலா மனோகரன் மற்றும் திருத்தணி பட்டதாரி ஆசிரியர் நாகேந்திரன் ஆகியோர் வழங்கினர்.
இப்பயிற்சியின் போது, திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழி பேசியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று, கணக்கெடுப்பு நடத்தி, சுயமாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக, வரும் 17ம் முதல் இம்மாதம் 31ம் தேதி வரை, வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, 'சென்சஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பார்க்க வேண்டும்.
கணக்கெடுப்பாளர்கள் தரவுகளை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பர். கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இணைந்து, இந்த பணியை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
