ADDED : டிச 26, 2024 03:29 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது கூர்மவிலாசபுரம் ஊராட்சி. இங்கு அரசு, துவக்கப் பள்ளி கட்டடம் கடந்தாண்டு சேதமடைந்தது.
எனவே, இப்பள்ளி கட்டடத்திற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 2023 -- 24ம் ஆண்டு, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், இரண்டு வகுப்பறை அமைக்க, 32 லட்சத்து 80,000 ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, டெண்டர் விடப்பட்டு, கடந்த மார்ச் மாதம் பணி துவங்கியது.
இப்பணியை ஆகஸ்ட் மாதம் முடிக்க கெடு விதிக்கப்பட்டிருந்தது.
கெடுவை மீறி, 4 மாதங்கள் ஆகியும் பள்ளி கட்டடப் பணி முடியவில்லை.
இதனால் பள்ளி மாணவர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நுாலக கட்டடத்தில் அமர்ந்து பயின்று வருகின்றனர். மழைக்காலத்தில் மழைநீர் வகுப்பறையில் ஒழுகும் நிலை உள்ளதால், பெற்றோர் கவலை அடைந்துஉள்ளனர்.
இதனால், பள்ளி கட்டடப் பணியை விரைந்து முடிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கட்டடப் பணி 70 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் கட்டடம் பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.