/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு அரிவாள் வெட்டு
/
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு அரிவாள் வெட்டு
ADDED : அக் 01, 2024 07:25 AM
மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரகு, 48. இவரது மகன்கள் விஷ்ணு, 24, விஷால், 22, ஆகியோர் மீஞ்சூர், பொன்னேரி காவல் நிலையங்களில், சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதில், விஷ்ணு, விஷால் ஆகியோர், கடந்த ஜூன் மாதம், 23ம் தேதி, பொன்னேரி பெரியகாவணம் பகுதியை சேர்ந்த லட்சுமணன், 26, என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில், புழல் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு, ஐந்து பேர் கொண்ட கும்பல், தோட்டக்காடு கிராமத்தில் உள்ள விஷ்ணுவின் வீட்டிற்கு சென்று, துாங்கிக்கொண்டிருந்த அவரது தந்தை ரகு, தாயார் ஜெயபாரதி, 42, விஷாலின் மனைவி அர்ச்சனா, 21, ஆகியோரை அரிவாளால் தலை, கை, கால்களில் வெட்டியது.
இவர்களது அலறல் சத்தம்கேட்டு, அருகில் வசிப்பவர்கள் ஓடி வருவதை கண்டு, கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பியது.
பலத்த காயமடைந்த மூவரும், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் நடந்த லட்சுமணன் கொலை வழக்கின் முன்விரோதம் காரணமாக, விஷ்ணுவின் குடும்பத்தினர் மீது கொலை முயற்சி சம்பவம் நடந்திருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.