/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடிகால் ஆக்கிரமிப்பால் சீசன் பழ சாகுபடி தாமதம் * பருவம் தவறியதால் புலம்பும் மணலி விவசாயிகள்
/
வடிகால் ஆக்கிரமிப்பால் சீசன் பழ சாகுபடி தாமதம் * பருவம் தவறியதால் புலம்பும் மணலி விவசாயிகள்
வடிகால் ஆக்கிரமிப்பால் சீசன் பழ சாகுபடி தாமதம் * பருவம் தவறியதால் புலம்பும் மணலி விவசாயிகள்
வடிகால் ஆக்கிரமிப்பால் சீசன் பழ சாகுபடி தாமதம் * பருவம் தவறியதால் புலம்பும் மணலி விவசாயிகள்
ADDED : மார் 17, 2025 02:28 AM

மணலி:மணலி மண்டல பகுதிகளில், மழைநீர் வெளியேற வழியின்றி, நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கிவிட்டதால், கோடை கால பழங்கள் சாகுபடி தாமதமாகியுள்ளது. பருவம் தவறிய சாகுபடி கை கொடுக்குமா என தெரியாமல், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மணலி கண்ணியம்மன் பேட்டை, கடபாக்கம், அரியலுார், அதை ஒட்டிய செம்பியம் மணலி, விச்சூர், விளங்காடு பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 200 ஏக்கர் பரப்பளவில், விவசாயம் நடந்து வருகிறது.
நெல், வாழை மட்டுமின்றி, குறைந்த நாள் பயிரான அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை வகைகள் பயிரிடுவது வழக்கம்.கோடைக்கு இதமான கிரிணி, தர்பூசணி, முலாம் பழங்கள் விவசாயமும் இங்கு களைகட்டும்.
வழக்கமாக, ஜனவரி இறுதி, பிப்ரவரி துவக்கத்தில் சீசன் பழ பயிர்கள் பயிடப்பட்டு, ஏப்ரல், மே மாதங்களில், பழங்கள் விற்பனைக்கு வந்து விடும்.
இந்தாண்டு ஜனவரியில் திடீரென மழை பெய்ததால், நிலத்தில் மழைநீர் தேங்கியது. வெளியேற வடிகால், வாய்க்கால் இல்லாததால் அப்படியே தேங்கிக் கிடந்தது. தானாக வற்றிய பிறகே, விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனால், ஈரப்பதம் மிகுந்த நிலங்களில் ஏர் ஓட்ட முடியவில்லை; சீசன் பழங்கள் பயிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மார்ச் பாதியில் தான், சீசன் பழங்கள் பயிரிட தொடங்கினர்.
ஏக்கருக்கு, 15,000 - 20,000 ரூபாய் வரை செலவழித்து, தர்பூசணி, முலாம் பழம் பயிரிட்டுள்ள நிலையில், 60 நாட்களில் நல்ல மகசூல் இருந்தால், ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.
இதன் பிறகும் திடீர் மழை பெய்தால், சீசன் பழங்கள் விவசாயம் முற்றிலும் பாதிக்கும் என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். முதற்கட்டமாக, 30 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே, சீசன் பழங்கள் பயிரிடப்பட்டுள்ளது.