ADDED : ஜூலை 23, 2024 12:56 AM

சமத்துவபுரத்தில் கஞ்சா விற்பனை
திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் ஊராட்சியில், சமத்துவபுரத்தில், 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு சுற்றியும் சுற்றுச்சுவர் இல்லாததால் எளிதாக மர்ம நபர்கள் புகுந்துவிடுவதால் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது.
சில இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். இந்த கஞ்சா பொட்டலங்கள் வாங்குவதற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் அதிகளவில் சமத்துவபுரத்தில் சுற்றி வருகின்றனர். இதனால் அடிக்கடி தகராறும் நடந்து வருகிறது. போலீசார் வீரகநல்லுார் சமத்துவபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்கள் தடுக்க வேண்டும்.
- --பி.மதுசூதனன், வீரகநல்லுார்.
மின்கம்பங்களில் விளக்கு வேண்டும்
திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ராமலிங்காபுரம்.
இந்த கிராமத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு கல்வி, கூலி வேலை, தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்று இரவு 7-- - 10 மணிக்குள்ளாக வீடு திரும்புகின்றனர்.
அவர்கள் பெரும்பாலும் திருவள்ளூர் - -- அரக்கோணம் நெடுஞ்சாலையில் இருந்து பரேஸ்புரம் வழியாக, ராமலிங்காபுரத்திற்கு 2 கி.மீ., துாரம் நடந்து செல்கின்றனர்.
அந்த சாலையில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்படாததால் அச்சமாக உள்ளதாகவும் இதனால் வழிப்பறி, பாலியல் சீண்டல் உள்ளிட்ட துன்பங்களை அனுபவிப்பதாக பெண்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க. ராமலிங்கம், ராமலிங்காபுரம்
பழுதடைந்த தார்ச்சாலை
திருத்தணி நகராட்சி, நல்லதண்ணீர் குளக்கரையில் தார்ச்சாலை, கடந்த, 7 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. முறையாக தார்ச் சாலை பராமரிக்காததால் தற்போது சாலை முழுதும் பழுதடைந்துள்ளது.
இச்சாலை வழியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் நோயாளிகள் இரு சக்கர வாகனம் அதிகளவில் செல்கின்றனர்.
இதுதவிர, முருகப்பநகர், கீழ்பஜார், பெரிய தெரு மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் பழுதடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்.
- எஸ்.கோதண்டன், திருத்தணி.
சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும்
மீஞ்சூர் ஒன்றியம், பனப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பனப்பாக்கம் மேட்டுகாலனி கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டும், கூடத்தை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்தும் உள்ளன. மின்சாதன பொருட்கள் பழுதடைந்தும், உள்ளன.
ஜன்னல்கள் சேதம் அடைந்து இருக்கின்றன. பல்வேறு வகைகளில் கிராம வாசிகளுக்கு பயன்தரும் சமுதாய கூடம் கட்டடத்தை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெ. வினோத், பொன்னேரி.
உயர்மட்ட பாலத்தில் பகலில் எரியும் மின்விளக்கு
கனகம்மாசத்திரம் -- தக்கோலம் நெடுஞ்சாலையில்,முத்துக்கொண்டாபுரம் கொசஸ்தலையாற்றை கடக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுஉள்ளது. பாலத்தின் இருபுறமும் உயர் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுஉள்ளது.
இந்நிலையில் இந்த உயர்மின்விளக்குகள் பகலிலும் எரிந்தபடி உள்ளது. இதனால் மின்சாரம் வீணாவது தேவையின்றி மின் செலவீனம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகலில் எரியும் மின்விளக்கை அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.சசிக்குமார், கனகம்மாசத்திரம்.