'சர்வர்' பிரச்னை: ஆவடியில் பத்திரப்பதிவு பணி பாதிப்பு
'சர்வர்' பிரச்னை: ஆவடியில் பத்திரப்பதிவு பணி பாதிப்பு
ADDED : பிப் 05, 2026 06:18 AM
ஆவடி: 'சர்வர்' பிரச்னையால், இரண்டு சொத்துக்களுக்கு ஒரே ஆவண எண் பதிவானதால், ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், பத்திர பதிவு பணிகள், மூன்று மணி நேரம் பாதிக்கப்பட்டன.
ஆவடி அடுத்த பருத்திப்பட்டு, அய்யங்குளம் பகுதியில், ஆவடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் 100க்கும் மேற்பட்ட 'டோக்கன்'கள் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவு நடந்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக, 'சர்வர்' பிரச்னையால், பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து, பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று மதியம் 'சர்வர்' பிரச்னையால், இரண்டு சொத்துக்களுக்கு ஒரே ஆவண எண் பதிவானதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பத்திரப் பதிவு மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால், முதியோர், பெண்கள் என, அனைவரும் பல மணி நேரம் காத்திருந்தனர்.
ஒரே ஆவண எண் பதிவு பிரச்னை தீர்க்கப்பட்டபின், மீண்டும் பத்திரப்பதிவு நடந்தது. நேற்று, 150 'டோக்கன்'கள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், இரவு 10:00 மணிக்கு மேலும் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.
