6,000 வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்க முடியாமல் திணறல்!
6,000 வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்க முடியாமல் திணறல்!
UPDATED : செப் 17, 2026 11:35 PM
ADDED : செப் 17, 2026 08:44 PM
திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் அரைகுறையாக செயல்படுத்தப்பட்டு இருப்பதால், 6,000 குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்க முடியாமல், பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. ஆவணங்களை கணினிமயமாக்குவது உள்ளிட்ட பணிகளில் நிர்வாகம் கவனம் செலுத்துவதால், பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடையாமல், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ளதால், மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சியின் 15 வார்டுகளில், 200க்கும் மேற்பட்ட தெருக்களில், 6,000 குடியிருப்புகளும், 25,000 மக்களும் வசிக்கின்றனர்.
இங்குள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்கான திட்டம் 2007ல் தொடங்கப்பட்டது. மொத்தம் 40.60 கோடி ரூபாய் செலவில், சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் பணி மேற்கொள்ளப்பட்டு 2019ல் நிறைவடைந்து, வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது.
திட்டப்படி 4,500 வீடுகளுக்கு இணைப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், 3,000 வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு கொடுக்கப்பட்டது.
எஞ்சிய 1,500 வீடுகளைச் சேர்ந்தோர் இணைப்பு பெறாமல், சாலை மற்றும் திறந்தவெளி பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால், திருமழிசையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமழிசை பேரூராட்சியில் மேலும் 4,000 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
விடுபட்ட மற்றும் புதிதாக உருவான குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி, ஏழு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதனால், வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி குளம் போல் தேங்கி வருகிறது. அதையும் அகற்ற முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
பாதாள சாக்கடை திட்டத்திற்காக பதிக்கப்பட்ட இயந்திர நுழைவு பகுதிகளில் இருந்தும், கழிவுநீர் பொங்கி சாலைகளில் வழிந்தோடுகிறது.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேறுவதற்கும், முறையான கால்வாய் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து, குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலையில், மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்டப்பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்டு உள்ள நிலையில், இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என, பகுதிமக்கள் புலம்பி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு செய்து, பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக நிறைவேற்றி, மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும் திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்ட போது, 3,000 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டன. விடுபட்ட வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அரசிடமிருந்து உத்தரவு மற்றும் நிதி வந்தவுடன், கூடுதல் இணைப்புகள் வழங்கப்படும். குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கிய ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. அதனாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்பணிகள் நிறைவடைந்தவுடன், அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நிறைவேற்றப்படும். அதன்பின், கழிவுநீரை திறந்தவெளியில் வெளியேற்றுவது தடுத்து நிறுத்தப்படும். - உமாராணி, செயல் அலுவலர், திருமழிசை பேரூராட்சி.
