/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை 14/82: கடத்தல், வழிப்பறி சம்பவங்களை தடுக்க முடியாமல் திணறல்
/
திருத்தணி காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை 14/82: கடத்தல், வழிப்பறி சம்பவங்களை தடுக்க முடியாமல் திணறல்
திருத்தணி காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை 14/82: கடத்தல், வழிப்பறி சம்பவங்களை தடுக்க முடியாமல் திணறல்
திருத்தணி காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை 14/82: கடத்தல், வழிப்பறி சம்பவங்களை தடுக்க முடியாமல் திணறல்
ADDED : ஜூலை 10, 2025 02:20 AM

திருத்தணி:திருத்தணி காவல் நிலையத்தில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 82 போலீசார் பணிபுரிய வேண்டிய இடத்தில், வெறும், 14 பேர் மட்டுமே பணிபுரிந்து வருவதால் திருட்டு, கடத்தல், வழிப்பறி மற்றும் பல்வேறு குற்றச் செயல்களை தடுக்க முடியாமல் போலீசார் சிரமப்படுகின்றனர். முக்கிய விழா மற்றும் போராட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாமல் திணறி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி போலீஸ் நிலைய எல்லைக்குள், 92 கிராமங்கள் உள்ளன. மேலும், முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக விளங்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலும் திருத்தணி நகரத்தில் உள்ளது.
இதுதவிர திருத்தணி நகரத்தில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம், அரசு பள்ளிகள் உள்பட, 60க்கும் மேற்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும் உள்ளது.
அரசு மற்றும் தனியார் என, 30க்கும் மேற்பட்ட வங்கிகள், 200க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன.
பாதுகாப்பு
மேற்கண்ட அரசு அலுவலகங்கள், வங்கிகள், திருமண மண்டபங்கள் மற்றும் கிராமங்களுக்கு பாதுகாப்பு பணி, திருட்டு, கடத்தல், வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் நடக்காமல் தடுப்பதற்காக திருத்தணி போலீஸ் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு பிரிவில் ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்பட 56 பேர் நியமனம் செய்துள்ளனர்.
அதே போல் குற்றப்பிரிவில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு உதவி ஆய்வாளர் உள்பட, 26 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் திருத்தணி போலீஸ் நிலையத்தில், 82 பேர் பணியாற்ற வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக திருவள்ளூர், சென்னை, வேலுார், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கடத்தி செல்லப்படும் கஞ்சா, கள்ளச்சாராயம், செம்மரம் மற்றும் திருட்டு மணல், கிராவல் உள்பட பல்வேறு கடத்தல்கள் தடுப்பதற்காக தமிழக-ஆந்திரா எல்லையான பொன்பாடி சோதனை சாவடி அமைத்து போலீசார், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
இந்நிலையில், தற்போது திருத்தணி போலீஸ் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் என, 44 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இவர்களில், நான்கு பேர் முருகன் மலைக்கோவில், மூன்று பேர் டி.எஸ்.பி., அலுவலகம், நான்கு பேர் நீதிமன்றம், ஒருவர் அரசு மருத்துவமனை, நான்கு பேர் ஓட்டுநர்கள், நான்கு பெண் காவலர்கள் மகப்பேறு மற்றும் மருத்துவ விடுப்பு என மொத்தம், 30 காவலர்கள் அயல்பணியில் உள்ளனர்.
மீதமுள்ள 14 பேர் மட்டுமே பாதுகாப்பு, ரோந்து பணி, கடத்தல், திருட்டு, வழிப்பறி, மறியல் போராட்டம் போன்ற பணிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
கோரிக்கை
இதுதவிர முக்கிய கோவில் விழா, பாதுகாப்பு பணி என, 14 பேரிலும், 10 பேரை அனுப்பி வைக்கின்றனர். இதனால் குற்றச்சம்பவங்கள் தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஒரு மாதத்தில் அடிதடி, திருட்டு, வழிப்பறி, கடத்தல் என குறைந்த பட்சம், 100க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன.
இதிலும், திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில், மாதத்திற்கு, குறைந்த பட்சம் 50 இரு சக்கர வாகனங்கள் திருடு போகிறது.
பாதிக்கப்பட்டவர்கள், இரு சக்கர வாகனங்கள் திருடிச் செல்பவர்கள் குறித்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளுடன் புகார் கொடுத்தும், திருடியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
எனவே மாவட்ட எஸ்.பி. உடனடியாக நடவடிக்கை எடுத்து திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு கூடுதல் போலீசார்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து திருத்தணி போலீஸ் அதிகாரி கூறுகையில், பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளுக்கு கூட போலீசார் பற்றாக்குறை உள்ளது. தினமும், பத்து புகார்கள் வருகின்றன.
இதை விசாரிக்க முடியாமால் திணறி வருகிறோம். போலீஸ் நிலையத்தில் காலியிடங்கள் குறித்து பட்டியல் தயாரித்து, டி.எஸ்.பி., மூலம் பரிந்துரை செய்து மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்தணி போலீஸ் நிலையம் முதல் தளத்தில் குற்றப்பிரிவு இயங்கி வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டர் பணியிடம் இரு ஆண்டுகளாக காலியாக உள்ளது. மேலும், உதவி ஆய்வாளரும், போலீசார் என, ஆறு மாதமாக யாரும் இல்லை.
இதனால் திருட்டு சம்பவங்களை தடுக்க முடியவில்லை. குற்றப்பிரிவும், சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களே கவனிப்பதால், புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஆகிறது.