குடிநீர் திருட்டை தடுக்க 456 இடங்களில்... 'ஸ்மார்ட் மீட்டர்!':ரூ.45 கோடியில் பொருத்துகிறது வாரியம்
குடிநீர் திருட்டை தடுக்க 456 இடங்களில்... 'ஸ்மார்ட் மீட்டர்!':ரூ.45 கோடியில் பொருத்துகிறது வாரியம்
UPDATED : செப் 06, 2026 04:35 AM
ADDED : செப் 05, 2026 02:50 PM

சென்னை: சென்னையில் குடிநீர் திருட்டை தடுக்கவும், அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீரை வினியோகிக்கவும், 45 கோடி ரூபாயில், 456 இடங்களில் 'ஸ்மார்ட் மீட்டர்' கருவி பொருத்தும் பணியில், குடிநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்ததும், எந்த பகுதியில் எவ்வளவு குடிநீர் செல்கிறது, அனைத்து இணைப்புகளுக்கும் முறையாக சென்றடைகிறதா என்பதை துல்லியமாக கண்டறிந்து, குறைபாடுகள் சரி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் இருந்தும், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்தும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் வாரியம் சார்பில், 8.20 லட்சம் இணைப்புகள் மற்றும் லாரிகள் வாயிலாக தினமும், 125 கோடி லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, 6,650 கி.மீ., நீள குழாய்கள், 143 பகிர்மான நிலையங்கள், 1 லட்சம் முதல் 60 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய 120 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் வழங்கப்படும் குடிநீர், அனைத்து பகுதிகளுக்கும் சீராக சென்றடைவதில் சிக்கல் உள்ளது.
குழாய்களில் மோட்டார் பொருத்தி குடிநீர் திருட்டு, நீரோட்டத்திற்கு ஏற்ற வகையில் குழாய்கள் அமைக்காதது, சாலை உள்ளிட்ட சேவை பணிகளின்போது சேதமடையும் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவு உள்ளிட்ட காரணங்களால், பல வீடுகளுக்கு முறையாக குடிநீர் கிடைப்பதில்லை.
குறிப்பாக, உட்புற தெருக்களில் வசிப்போர் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அனைத்து வீடுகளுக்கும் சீராக குடிநீர் வழங்குவதை முறைப்படுத்தவும், குடிநீர் திருட்டு நடப்பதை தடுக்கவும், வாரியம் புதுமுயற்சியை கையில் எடுத்துள்ளது.
அதன்படி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பகிர்மான நிலையங்கள், நீர்த்தேக்க தொட்டிகள், முக்கிய வழித்தடங்கள் மற்றும் உட்புற தெருக்களில் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க, ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி வருகிறது.
மொத்தம் 45 கோடி ரூபாய் மதிப்பில், 456 இடங்களில் பொருத்தப்படும் இந்த மீட்டர், ஐ.ஓ.டி., என்ற மின் சாதனங்களை ஒருகுடையின் கீழ் கண்காணிக்கும் இணைய தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து இணைப்புகளுக்கும் சீராக குடிநீர் செல்வதை உறுதிசெய்ய, மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. டிசம்பருக்குள் இப்பணி முடியும். ஜனவரி முதல் இந்த மீட்டரில் உள்ள சென்சார் வாயிலாக, தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும்.
எந்த பகுதியில் எவ்வளவு குடிநீர் செல்கிறது, அனைத்து இணைப்புகளுக்கும் முறையாக சென்றடைகிறதா என்பதை துல்லியமாக கண்டறிந்து, குறைபாடுகள் சரி செய்யப்படும்.
நீர்க்கசிவு, திருட்டு இணைப்பையும் கண்டறிந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இதன் வாயிலாக, அனைத்து பகுதிகளுக்கும் சீரான மற்றும் கூடுதல் குடிநீர் வினியோகிப்பதையும் உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
