குப்பை கிடங்கினை தீ வைத்து கொளுத்தும் அவலம் தலக்காஞ்சேரி பகுதியில் புகையால் நோய் அபாயம்
குப்பை கிடங்கினை தீ வைத்து கொளுத்தும் அவலம் தலக்காஞ்சேரி பகுதியில் புகையால் நோய் அபாயம்
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 08:56 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக், மருத்துவமனை கழிவுகளை, தலக்காஞ்சேரி குப்பை கிடங்கில் கொட்டி, தினமும் தீ வைத்து எரித்து வருவதால், அப்பகுதி மக்கள் தொற்று நோய் அபாயத்தில் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், மட்கும், மட்காத குப்பை என, 40 டன் குப்பை தினமும் சேகரிக்கப்படுகிறது. தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், வீடுதோறும் சென்று குப்பையை தரம் பிரித்து பெற்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, நகராட்சியில் சேகரித்து வந்த குப்பை கழிவுகளை, தலக்காஞ்சேரியில் சேகரிக்கப்பட்டு வந்தது. அதிகரித்து வரும் குப்பை கழிவுகளை கொட்ட அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதுடன், அப்பகுதி மக்களின் எதிர்ப்பால், கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில், 4.70 ஏக்கர் நிலத்தில் குப்பை கழிவுகளை உரமாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும், நகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஈக்காடு அருகில் உரக்குடில் அமைத்து, குப்பை கழிவுகளை உரமாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால், திருவள்ளூர் நகராட்சி குப்பை கிடங்கு இல்லாத நகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
தற்போது, நகராட்சியில் சேகரிக்கும் மருத்துவமனை கழிவு மற்றும் குப்பை கழிவுகளை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தலக்காஞ்சேரியில் பழைய குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதனால், மீண்டும் தலக்காஞ்சேரியில் குப்பை மலை உருவாகி விட்டது.
அங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை, அவ்வப்போது தனியார் தூய்மை பணியாளர்கள் சிலர், தீ வைத்து எரித்து வருகின்றனர்.
இதனால், தலக்காஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு, குடியிருப்பு மக்களையும், நகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவ – மாணவியருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை, திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் கவிதா ஆய்வு செய்து, குப்பையை தீயிட்டு எரிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
