ADDED : நவ 15, 2026 08:38 PM

ஆர்.கே.பேட்டை: இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து வாஷிங் மிஷினில் பதுங்கிய மலைப்பாம்பை, இன்று (நவ.,15) தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரில், நேற்று (நவ.,14) இரவு 11:00 மணி அளவில், தெருவில் ஊர்ந்து வந்த மலைப்பாம்பு ஒன்று, சின்ன பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த லோகேஷ் என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அந்த பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு, அங்கிருந்த வாஷிங் மிஷினில் புகுந்து பதுங்கியது. உடன், பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வாஷிங் மிஷினில் பதுங்கிய மலைப்பாம்பை சாதுர்யமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட மலைப்பாம்பு, பள்ளிப்பட்டு அடுத்த புல்லூர் கிழக்கு காப்பு காட்டில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.
சீரானது குளம்
பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்டது புதுார். புதுார் கிராமத்தின் வடமேற்கில், பொது குளம் ஒன்று உள்ளது.
இந்த குளம், சில ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் செடி, கொடிகளுடன் கழிவுநீர் குட்டையாக மாறி இருந்தது.
இந்த குளத்தில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக, புதுார் கிராம மக்கள், சில நாட்களாக கூறி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
மலைப்பாம்பு பீதியால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அச்சத்துடன் இருந்து வந்ததால், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி நிர்வாகம், இன்று பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் வனத்துறையினரின் பாதுகாப்புடன், இந்த குளத்தை பொக்லைன் இயந்திரத்தின் வாயிலாக துார் வாரி சீரமைத்தது.
ஆனாலும், இந்த குளத்தில் இருந்து மலைப்பாம்பு எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால், மலைப்பாம்பு பிடிபடாவிட்டாலும், குளம் சீரானதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
