/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தெருநாய்கள் கடித்து மான் உயிரிழப்பு
/
தெருநாய்கள் கடித்து மான் உயிரிழப்பு
ADDED : பிப் 09, 2025 09:34 PM
திருவாலங்காடு:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது புதூர் கிராமம். இங்குள்ள காப்புக்காட்டில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்த மான்கள் இரை மற்றும் நீரை தேடி ஊருக்குள் வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று, பிற்பகல் 12:00 மணியளவில், புதூரில் தனியார் பார்மா கல்லூரி அருகே கொசஸ்தலை ஆற்றில் நீர் அருத்திய போது, 3 வயது பெண் மானை அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் துரத்தின.
ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் துரத்திக் கொண்டு போய், மானை கடித்தன. இதில், பின்னங்கால் மற்றும் உடலில் காயம் அடைந்த மான் உயிரிழந்தது.
சம்பவம் குறித்து திருவள்ளூர் வனத்துறை ரேஞ்சர் அருள்நாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மானை கைப்பற்றி, வனத்துறை அலுவலர்கள் விசாரிக்கின்றனர்.

