சுரங்கப்பாதை நடைமேடை பணி நிறைவு: வாகன ஓட்டிகள் அச்சம்
சுரங்கப்பாதை நடைமேடை பணி நிறைவு: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஏப் 26, 2026 10:38 PM

பள்ளிப்பட்டு: ஆறு வழிச்சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் நடைமேடை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இருள் சூழ்ந்த சுரங்கப்பாதையில் அமைந்துள்ள நடைமேடையால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் - ஆந்திர மாநிலம் சித்துார் வரை ஆறுவழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கமாக எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களுருவுக்கு சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல முடியும்.
பள்ளிப்பட்டு வழியாக செல்லும் இந்த ஆறுவழி சாலையில், மேலப்பூடி கிராமத்திற்கு சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்துள்ள இந்த சுரங்கப்பாதையில் நடைமேடை அமைக்கப்பட்டு பணி நிறைவு பெற்றுள்ளது.
சுரங்கப்பாதையில் உள்ள நடைமேடையால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்த எச்சரிக்கை பதாகையும் அமைக்கப்படவில்லை. இந்த வழியாக செல்லும் விவசாயிகளும், மேலப்பூடி, சொரக்காய்பேட்டை அரசு பள்ளி மாணவ - மாணவியரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், சுரங்கப்பாதையில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
