புகார்தாரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நில அளவை பணி பாதியில் நிறுத்தம்
புகார்தாரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நில அளவை பணி பாதியில் நிறுத்தம்
UPDATED : நவ 11, 2026 09:14 PM
ADDED : நவ 11, 2026 09:12 PM

திருமழிசை: திருமழிசையில், நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து வந்த நில அளவை பணி, புகார்தாரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
திருமழிசை பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர், பேரூராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய வேண்டுமெனவும், அந்த நிலத்தில் நாகம்மாள் என்பவர் அமைத்துள்ள வேலியை அகற்ற வேண்டுமெனவும் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரப்படி, பூந்தமல்லி தாசில்தார் நடராஜன் தலைமையிலான வருவாய் துரை அதிகாரிகள், நேற்று சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.
அப்போது, வருவாய்த்துறை அதிகாரிகள் நில அளவை பணி மேற்கொண்ட போது, புகார்தாரர் பாஸ்கர், கான்கிரீட் சாலையில் உள்ள எல்லை கல்லில் இருந்து அளவீடு செய்ய வேண்டுமென கூறி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, சாலையை சேதப்படுத்தி அளவீடு செய்ய வேண்டுமென்றால், பேரூராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என, பேரூராட்சி அலுவலர்கள் கூறினர்.
இதையடுத்து, அரசு விதிகளின்படி தான் அளவீடு செய்ய முடியும் என, பாஸ்கரிடம் கூறிவிட்டு, பணிகளை பாதியிலேயே நிறுத்தி திரும்பி சென்றனர்.
