/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆசிரியர் பற்றாக்குறை பெற்றோர் ஆர்ப்பாட்டம்
/
ஆசிரியர் பற்றாக்குறை பெற்றோர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 12, 2025 01:08 AM

கும்மிடிப்பூண்டி,:அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து, மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் அருகே அப்பாவரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த கல்வி ஆண்டில், ஐந்து வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியை மட்டுமே வேலை பார்த்து வந்தார். ஆசிரியை பற்றாக்குறையால், மாணவர்களின் எண்ணிக்கை 32லிருந்து பாதியாக குறைந்தது.
நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இருந்த ஆசிரியை, கலந்தாய்வில் வேறு இடம் கேட்டு மாற்றலானார். தகவல் அறிந்த பெற்றோர், நேற்று குழந்தைகளுடன் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், 'ஏற்கனவே பள்ளியில் அமராவதி என்ற ஆசிரியை ஒருவர் மட்டுமே இருந்தார். அவர் சிறப்பாக பாடம் எடுத்ததால், ஒரு ஆசிரியை இருந்தாலும் பரவாயில்லை என, எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினோம்.
'நடப்பு கல்வி ஆண்டில் கூடுதலாக ஒரு ஆசிரியை கிடைக்கப்பெற்ற நிலையில், பழைய ஆசிரியை வேறு இடத்திற்கு மாற்றலானார். இதனால் மீண்டும் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்து மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
'ஆசிரியை அமராவதியை மீண்டும் இங்கு பணி அமர்த்த வேண்டும். பள்ளிக்கு இரு ஆசிரியைகள் இருந்தால், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், கல்வியும் பாதிக்காது' என்றனர்.