/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் கோவில் தேர் கண்காணிப்பு இன்றி பாழ்
/
மீஞ்சூரில் கோவில் தேர் கண்காணிப்பு இன்றி பாழ்
ADDED : பிப் 17, 2025 11:11 PM

பொன்னேரி,
மீஞ்சூரில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. கடந்த, 2016ல், 1 கோடி ரூபாய் செலவில், 45 அடி உயரத்தில் புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டு இரண்டு கோவில்களின் திருவிழாக்களின்போது வீதி உலா வருகிறது.
கோவில் தேரை மழை, வெயிலில் பாதிப்படையாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநலச் சங்கத்தின் சார்பில், இருபுறமும் இரும்பு ஷட்டர்களுடன் கூடிய தனி கட்டடம் அமைத்து தரப்பட்டது.
கடந்த, 2023ல், 'மிக்ஜாம்' புயலின்போது, கட்டடத்தின் ஷட்டர்கள் சேதம் அடைந்தன. கடந்த ஆண்டு திருவிழாவின்போது, சேதம் அடைந்த ஷட்டர்களை இயந்திரங்கள் உதவியுடன் சிரமத்துடன் திறக்கப்பட்டன.
திருவிழா முடிந்தபின், தேர் நிலையில் நிறுத்தப்பட்டது. ஆனால், சேதம் அடைந்த ஷட்டர்கள் இதுவரை சீரமைக்கப்படாமல் இருக்கிறது.
இதனால் மழை, வெயிலில் தேர் பாழாகி வருவது பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:
கொடையாளர்களால் உருவாக்கப்பட்ட தேரை பராமரிப்பில் கோவில் நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது. தேர் சேதமானால், மீண்டும் உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஓராண்டிற்கு மேலாக இதே நிலை தொடர்கிறது. மழை, வெயிலில் தேர் பாழாவதை தடுக்க ஷட்டர்களை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.