அரசு பள்ளி சத்துணவு மையங்களில் அடிப்படை வசதி குறித்து சோதனை
அரசு பள்ளி சத்துணவு மையங்களில் அடிப்படை வசதி குறித்து சோதனை
ADDED : ஆக 21, 2026 04:12 PM
திருத்தணி, ஆக. 22–
திருத்தணி அரசு பள்ளிகளில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில், அடிப்படை வசதிகள் குறித்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
திருத்தணி ஒன்றியத்தில், மொத்தம் 98 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு, 3,864 மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர்.
அரசு சார்பில், அனைத்து மாணவ – மாணவியருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. கடந்த தி.மு.க., ஆட்சியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவியருக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், புதிதாக ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக்கழக அரசு, வரும் செப்., 15ம் தேதி முதல், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளது.
இதையடுத்து, காலை சிற்றுண்டி தயாரித்து மாணவ – மாணவியருக்கு வழங்க வேண்டிய நிலையில், அரசு பள்ளிகளில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில், மின்சாரம், குடிநீர், கட்டடத்தின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் கவிதா உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தற்போது மின்சாரம், குடிநீர் வசதி போன்றவை இல்லாத சத்துணவு மையங்களில், அவற்றை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, குறைகளை கேட்டு அறியும் பணியில் ஒன்றிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
