/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் 'நுாலக நண்பர்கள்' திட்டம் வாசிப்பை நேசிக்க தவறும் மக்கள்
/
கிடப்பில் 'நுாலக நண்பர்கள்' திட்டம் வாசிப்பை நேசிக்க தவறும் மக்கள்
கிடப்பில் 'நுாலக நண்பர்கள்' திட்டம் வாசிப்பை நேசிக்க தவறும் மக்கள்
கிடப்பில் 'நுாலக நண்பர்கள்' திட்டம் வாசிப்பை நேசிக்க தவறும் மக்கள்
ADDED : நவ 23, 2025 03:08 AM
திருவாலங்காடு: மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயன்பெறும் வகையில், வீடு தேடிச் சென்று புத்தகங்கள் வழங்கும் நுாலக நண்பர்கள் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருவாலங்காடு ஒன்றியத்தில் கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, மணவூர், சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில், மொத்தம் 42 நுாலகங்கள் செயல்படுகின்றன.
இங்கு, நாளிதழ்கள், வரலாறு, கதை, கவிதை புத்தகங்கள், மத்திய - மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன. இதனால் மாணவர்கள், முதியவர்கள் என, அனைத்து வயதினரும் நுாலகத்திற்கு செல்கின்றனர். புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்றும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், வாசிப்பு பழக்கம் இருந்தும், நுாலகங்களுக்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகள், முதியோர், பெண்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் வீடு தேடிச் சென்று புத்தகங்கள் வழங்க, 'நுாலக நண்பர்கள்' என்ற திட்டம் துவக்கப்பட்டது.
ஆனால், ஆர்வமற்ற தன்னார்வலர்கள் மற்றும் வாசிப்பை நேசிக்காதவர்களால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நுாலகர்கள் கூறியதாவது:
தன்னார்வலர்களுக்கு தனியாக ஒரு பதிவேடு வழங்கி, குறிப்பிட்ட எண்ணிக்கையில் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று, நுாலகத்திற்கு வரமுடியாத முதியோர், மாற்றுத்திறனாளிகள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரின் விபரங்களை சேகரித்து, அவர்களை உறுப்பினர்களாக சேர்க்கின்றனர்.
அவர்கள் விரும்பி கேட்கும் புத்தகங்களை வழங்கி வந்தனர். குறிப்பிட்ட காலகெடுவுக்குள் புத்தகங்களை பெற்று, மீண்டும் நுாலகத்தில் ஒப்படைப்பர். ஆனால், தன்னார்வலர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
மொபைல்போன் பயன்பாட்டால், புத்தகம் வாசிப்பை பலரும் தவிர்த்து வருகின்றனர். இதனால், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

