/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீனவர்கள் கடும் உழைப்பால் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது பொங்கல் விழாவில், தமிழக கவர்னர் பெருமிதம்
/
மீனவர்கள் கடும் உழைப்பால் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது பொங்கல் விழாவில், தமிழக கவர்னர் பெருமிதம்
மீனவர்கள் கடும் உழைப்பால் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது பொங்கல் விழாவில், தமிழக கவர்னர் பெருமிதம்
மீனவர்கள் கடும் உழைப்பால் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது பொங்கல் விழாவில், தமிழக கவர்னர் பெருமிதம்
ADDED : ஜன 13, 2025 01:36 AM

பொன்னேரி:'மீனவர்கள் கடும் உழைப்பால் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது' என, மீனவப் பகுதியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி பேசினார்.
திருவள்ளுவர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, மேலஅவுரிவாக்கம் கிராமத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் தலைமை வகித்தார்.
இதில், தமிழக கவர்னர் ரவி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவருக்கு, பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.
வரவேற்புரை வழங்கிய மீஞ்சூர் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சுமித்ராகுமார் பேசியபோது, ''தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திற்கு உள்ளுர் எம்.எல்.ஏ.,க்களே வராத சூழலில், அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் கவர்னர் வந்திருப்பது, மீனவ மக்களை பெருமைப்படுத்தும் செயல்,'' என்றார்.
பின், கிராம மக்களுடன் சேர்ந்து, கவர்னர் பொங்கல் வைத்தார். அங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
அதையடுத்து, சிறுவர் - சிறுமியரின் நாட்டியம், சிலம்பம், மீனவ பெண்களின் கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டு கைதட்டி ரசித்தார். அவர்களை பாராட்டி பரிசுகளும் வழங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக கவர்னர் மீனவ மக்களிடம் 'அனைவருக்கும் வணக்கம், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என தமிழில் பேசினார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு மீனவ சமுதாயத்தினர் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர். அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை சந்தித்து வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களது பணி எவ்வளவு சவால் நிறைந்தது என்பதும் எனக்கு தெரியும்.
மீன் பிடிக்க சென்று மீனவர்கள் கரை திரும்பவில்லை என்ற தகவல் அறிந்து வருத்தம் அடைந்தேன். கன்னியாகுமரி, ராமநாதபுரம், துாத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மீனவர்களின் துயரங்களை அறிந்து உள்ளேன். மீனவர்கள் போன்றவர்களின் உழைப்பால்தான் நாடு முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மீனவர்களை சந்திக்கும் போதெல்லாம், அவர்களின் துன்பங்களை கூறுகிறார்கள். மத்திய, மாநில அரசிடம் எடுத்துக்கூறி, அதற்கு தீர்வு காண நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
சட்டசபை மற்றும் பார்லிமென்ட்டில், மீனவ சமுதாய மக்கள் போதுமான பிரதிநித்துவம் பெறவில்லை. நான் பிரதமரை சந்திக்கும் போதெல்லாம், மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து கேட்க, அவர் தவறுவதில்லை.
மீனவ சகோதர சகோதரிகளே, பாதுகாப்பான உங்களது எதிர்காலத்திற்கு நான் வாழ்த்துகிறேன். உங்களது அன்பால் நான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன். கலை நிகழ்ச்சிகள் நடத்திய சிறுவர் - சிறுமியர்கள் பங்களிப்பிற்கு பாராட்டுக்கள்.
இவ்வாறு பேசினார்.
பேச்சின் நிறைவாக, 'வாழ்க தமிழ், வாழ்க பாரதம், வாழ்க மீனவ சமுதாயம்' என்று தமிழில் கூறினார்.