/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாட்டிற்கு வந்தது பழவேற்காடு முகத்துவாரம்
/
பயன்பாட்டிற்கு வந்தது பழவேற்காடு முகத்துவாரம்
ADDED : ஆக 13, 2025 11:18 PM
சென்னை:பழவேற்காடு முகத்துவாரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழவேற்காட்டில், முகத்துவார நிலைப் படுத்தும் சுவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. இப்பணி முழுமையாக முடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில், கடலும், ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக, 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.
தொடர் கோரிக்கை பழவேற்காடு கடற்கரையில் டச்சுகாரர்கள் கடல் வாணிபம் செய்தனர். அதனால், இப்பகுதி புகழ் பெற்றது. அவர்கள் பயன்படுத்திய கட்டடங்கள் இன்றளவும் அங்கு உள்ளன. அவற்றைக் காண சுற்றுலா பயணியர் அதிகம் வருவர்.
தொடர்ந்து, பழவேற்காடு மீன்பிடி தொழிலில் முன்னிலை வகித்தது. ஆனால், கடல் சீற்றத் தாலும், பருவநிலை மாற்றத்தினாலும், மணல் திட்டுக்கள் உருவாகி, முகத்துவாரம் அடைத்து, மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு வந்தது.
உப்பு தண்ணீரானது, கடலுக்குள் சென்று வந்தால் தான் ஆக்ஸிஜன் இருக்கும். அப்போது தான் அங்கு இறால் வளர்ப்புக்கும், மீன் பிடிப்பிற்கும் சாதகமான சூழ்நிலை இருக்கும். நீடித்து வந்த இப்பிரச்னை குறித்து, அப்பகுதி மீனவர்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் அடிப்படையில், நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ், 27 கோடி ரூபாயில் நிரந்தர, முகத்துவார நிலைப்படுத்தும் சுவர் அமைக்க, 2020ல் தமிழக அரசு அரசானை வெளியிட்டது.
ஆனால் பல்வேறு பிரச்னைகளால், முகத்துவாரம் அமைக்கும் பணி துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் மீனவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் 2024ம் ஆண்டில் முகத்துவாரம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
கடலுக்கு கற்கள் எடுத்துச் செல்லும் வசதிக்காக, 4.5 கிலோ மீட்டருக்கு அணுகு சாலை அமைக்கப்பட்டது. 120 மீட்டர் இடைவெளி விட்டு, இருபுறமும் 292 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள், முகத்துவாரம் நிலைத்தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மகிழ்ச்சி இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தடுப்பு சுவர் அமைக்கும் பணியை 18 மாதங்களில் முடிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரியில் துவங்கப்பட்ட பணி, தற்போது, நிறைவடைந்து உள்ளது. மணல் திட்டுகளால், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத சூழல் நிலவிய நிலையில், தற்போது, அவர்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு பிறந்துள்ளது. இதனால், மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது:
பல நாட்கள் போராட்டத்திற்கு பின், முகத்துவாரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முகத்துவாரம் தற்போது, பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இனி மணல் திட்டுகள் உருவாவது தடுக்கப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.