/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் எதிர்ப்பு அலைகளால் தொடரும் பரபரப்பு
/
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் எதிர்ப்பு அலைகளால் தொடரும் பரபரப்பு
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் எதிர்ப்பு அலைகளால் தொடரும் பரபரப்பு
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் எதிர்ப்பு அலைகளால் தொடரும் பரபரப்பு
ADDED : ஜூலை 21, 2025 11:48 PM

கும்மிடிப்பூண்டி, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு அலைகள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை, 10வது நாளாக போலீசார் தேடி வருகின்றனர். தனிப்படைகள் மற்றும் சைபர் கிரைம் குழுவினர் தீவிரமாக, அந்நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை தொடர்ந்து, காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
அமைச்சர் நாசர் தலைமையிலான தி.மு.க.,வினர், சிறுமியின் பெற்றோரை சந்திக்க ஆரம்பாக்கம் சென்றனர்.
பின், சந்திக்காமல் வந்த வழியே திரும்பி சென்றனர். பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்க எண்ணி சென்றதாக கூறப்படுகிறது.
முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள் பெஞ்சமின், மூர்த்தி, ரமணா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலராமன், பொன் ராஜா ஆகியோர், சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி, சிறுமியின் மருத்துவ மற்றும் கவுன்சிலிங் செலவிற்கு, 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கினர்.
பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா, குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.
நேற்று மாலை பா.ஜ., சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஆரம்பாக்கம் பஜார் வீதியில் கோஷமிட்டபடி சென்றனர். பின், காவல் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து, நிர்வாகிகள் 10 பேர் மட்டும் காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 'விரைவில் குற்றவாளியை கைது செய்து விடுவோம்' என, போலீசார் தெரிவித்து, அவர்களை அனுப்பி வைத்தனர்.
திருத்தணியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசை கண்டித்தும், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

