ADDED : ஜன 13, 2025 03:24 AM

திருத்தணி:திருத்தணியில் இருந்து, மேல்திருத்தணி, பாபிரெட்டிப்பள்ளி, சூர்யநகரம், புச்சிரெட்டிப்பள்ளி வழியாக, பொதட்டூர்பேட்டை செல்லும் முதன்மை மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும்.
இந்த வழித்தடத்தில், தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில். திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர், சாலையை முறையாக பராமரிக்காததால், தற்போது நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
அதாவது, பாபிரெட்டிப்பள்ளி பகுதியில் இருந்து, சூர்யநகரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டும், தார்ச்சாலை முழுமையாக பெயர்ந்தும் உள்ளன.
இந்த வழியாக செல்லும் போது வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.
நெடுஞ்சாலை சேதம் அடைந்து பல மாதங்கள் ஆகியும், அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சீரமைக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் பழுதடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.