/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
7 ஆண்டாக பாதாள சாக்கடை திட்ட பணி இழுபறி...எப்பதான் முடியுமோ?: 40 லட்சம் லிட்டர் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பு
/
7 ஆண்டாக பாதாள சாக்கடை திட்ட பணி இழுபறி...எப்பதான் முடியுமோ?: 40 லட்சம் லிட்டர் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பு
7 ஆண்டாக பாதாள சாக்கடை திட்ட பணி இழுபறி...எப்பதான் முடியுமோ?: 40 லட்சம் லிட்டர் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பு
7 ஆண்டாக பாதாள சாக்கடை திட்ட பணி இழுபறி...எப்பதான் முடியுமோ?: 40 லட்சம் லிட்டர் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பு
UPDATED : நவ 05, 2025 02:28 AM
ADDED : நவ 05, 2025 01:38 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில், 22 வார்டுகளில், கடந்த 2018ல், 62.82 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்ட பணி துவங்கி ஏழு ஆண்டுகளான நிலையில், இதுவரை பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. இதனால், 40 லட்சம் லிட்டர் கழிவுநீர், மழைநீர் கால்வாய் மூலம் நீர்நிலைகளில் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எப்போது பணி முடியும் என தெரியாமல், அப்பகுதி மக்கள் விரக்தியுடன் காத்திருக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில், முதல்கட்டமாக 22 வார்டுகளில், 62.82 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை திட்ட பணிகள், கடந்த 2018ல் துவக்கப்பட்டது.
கடந்த 2011ல், பொன்னேரி பேரூராட்சியாக இருக்கும்போது திட்டம் அறிவிக்கப்பட்டு, கழிவுநீர் உந்து நிலையம், சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவைகளுக்கு இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், நீண்ட இழுபறிக்கு பின், 2018ல் பணிகள் துவக்கப்பட்டன.
தெருக்களில் பள்ளம் தோண்டி, அதில் இரும்பு மற்றும் கான்கிரீட் உருளைகள் பதிப்பது, மேன்ஹோல்' பொருத்துவது என, 41.45 கி.மீ.,க்கு பணிகள் நடைபெற்றன.
குடியிருப்புகளின் கழி வுநீரை சேகரித்து, சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக, நான்கு இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டன. பொன்னேரி, பெரியகாவணம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றின் அருகே, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டது.
இங்கு தினமும், 60 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து, ஆரணி ஆற்றில் விடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள் முடிந்து ஓராண்டாகிறது.
கழிவுநீர் உந்து நிலையங்களுக்கும், சுத்திகரிப்பு ஆலைக்கும் இடையே உள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே, பூமிக்கடியில் குழாய் பதிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பின், அங்கிருந்து 3.8 கி.மீ.,யில் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டை தாண்டி விடுவதற்கான குழாய் பதிப்பு பணிகள் நடைபெற்றன.
தனியார் ஒப்பந்த நிறுவனம், குறைந்த பணியாளர்களை கொண்டு மந்தகதியில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு பணியையும் குறித்த காலத்திற்கு முடிக்காமல் காலம் தாழ்த்தியே வந்தது.
பணிகளுக்கான கால அவகாசம் ஐந்து ஆண்டுகள் என்ற நிலையில், கடந்த 2023ல் திட்டம் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், திட்டப்பணிகள் துவங்கி ஏழு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத நிலையே உள்ளது.
பாதாள சாக்கடை திட்டம் செயலுக்கு வராத நிலையில், கடைகள், குடியிருப்புகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேறும், 35 - 40 லட்சம் லிட்டர் கழிவுநீர், மழைநீர் கால்வாய்களில் வெளியேற்றப்படுகிறது.
இவை, ஆரணி ஆறு, கும்மமுனிமங்கலம் குளம், திருவாயற்பாடி ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு, மழைநீர் கால்வாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள நன்னீருடன் கழிவுநீர் கலந்து மாசடைந்து வருகிறது.
இதனால், நீர்நிலைகளில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், கால்வாய்களில் அடைப்பு ஏற்படும்போது, கழிவுநீர் செல்ல வழியின்றி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், குடியிருப்பு மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
திட்டப்பணிகளை மேற்கொள்ளும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோ, 'பணிகள், இறுதிகட்டத்தை அடைந்துவிட்டது' என, இரண்டு ஆண்டுகளாக தெரிவித்து வருகின்றனர். ஆனால், பணிகள் முடியாமலும், பயனுக்கு வராத நிலையும் தொடர்வது, சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கடந்த 2011ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது திட்டம் அறிவிக்கப்பட்டது. அக்கட்சி 10 ஆண்டுகள், தற்போதைய தி.மு.க., ஆட்சி, நாலரை ஆண்டுகள் என, 15 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இத்திட்டம் பயன்பாட்டிற்கு வராமல் மந்தகதியில் நடந்து வருகிறது.
திட்டம் செயலுக்கு வந்த பின்னரே கட்டணம் நிர்ணயிப்பது, வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறும். கழிவுநீரால் நீர்நிலைகள் மாசடைந்து, மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
இனி வரும் நாட்களில் பணிகளை துரிதமாக முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரைவில் பணி நிறைவுபெறும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பல்வேறு கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது சோதனை ஓட்டத்திற்கான பணி நடைபெறுகிறது. வீடுகளுக்கு 'இன்டர்னல் பிளம்பிங்' முறையில் இணைப்பு வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு மாதத்தில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வந்துவி டும். - குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி, திருவள்ளூர்.

