/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீரராகவர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
/
வீரராகவர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
ADDED : பிப் 13, 2024 06:26 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவில், தை பிரம்மோற்சவத்தின், ஒன்பதாவது நாளான நேற்று, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
உற்சவர் வீரராகவ பெருமாள் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.
ஒன்பதாம் நாளான, நேற்று காலை, ஆள் மேல் பல்லக்கு நடந்தது. பகல், 11:00 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில், ஹிருதாபநாசினி திருக்குளத்தில், உற்சவர் வீரராகவப் பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் குளத்தில் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, ஏராளமான பக்தர்களும், தீர்த்தவாரி நிகழ்ச்சியில் புனித நீராடினர்.
இரவு, விஜயகோடி விமானம் புறப்பாடு சேவையில், உற்சவர் வீரராகவர் அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் 10ம் நாளான இன்று, பகல், 12:00 மணியளவில், த்வாதஸ ஆராதனம், இரவு வெட்டிவேர் சப்பரம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு, கொடியிறக்கத்துடன், தை பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
முருகன் வீதியுலா
திருத்தணி முருகப்பெருமான் ஆண்டுதோறும் ஒரு நாள் பட்டாபிராமபுரம் கிராமத்தில் வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.
அந்த வகையில் நேற்று காலை, 8:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக மேல்திருத்தணி நல்லாங்குளம், வந்தடைந்தார். பின், மாட்டு வண்டி மூலம் உற்சவர் முருகப்பெருமான் சித்துார் சாலை, புதிய சென்னை சாலை, சென்னை - திருப்பதி தேசிய சாலை வழியாக மதியம், 1:00 மணிக்கு பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார்.
அப்போது சிறப்பு பூஜைகள் நடத்தி, 1 கி.மீ., துாரத்தில் உள்ள பட்டாபிராமபுரம் கிராமத்திற்கு அழைத்து சென்றனர் மாலை, 5:00 மணிக்கு பெருமாள் கோவில் மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கிராம வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.
நள்ளிரவில் உற்சவர் முருகப்பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றடைந்தார். ஏற்பாடுகளை பட்டாபிராமபுரம் கிராமத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.