ADDED : பிப் 12, 2025 10:19 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, ரெட்டம்பேடு அருகே, குருவிஅகரம் கிராமத்தில், துர்க்கையம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து ஒலி பெருக்கி கருவிகளை திருடி சென்றனர்.
அன்று இரவு அருகில், குமரஞ்சேரி கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நான்கு மர்ம நபர்கள், கட்டிங் இயந்திரம் கொண்டு பூட்டை உடைத்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து கலைத்து சென்ற மர்ம நபர்கள், கருவறை பூட்டை உடைக்க முடியாமல் வெளியேறினர்.
தைப்பூசம் தினத்தன்று ஏராளமான பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தியிருந்தனர். கோவில் நிர்வாகிகள், காணிக்கைகளை பாதுகாக்கும் நோக்கில், நேற்று முன்தினம் இரவு, உண்டியலை கருவறைக்குள் வைத்து பூட்டினர். இதனால் உண்டியல் தப்பியது.
இரு திருட்டு சம்பவங்கள் குறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், குமரஞ்சேரி முருகன் கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவான நான்கு நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.