திருவள்ளூர் அரசு பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் 500 பணியிடம் காலி!மைதானம், உபகரணங்களும் இல்லை என குற்றச்சாட்டு
திருவள்ளூர் அரசு பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் 500 பணியிடம் காலி!மைதானம், உபகரணங்களும் இல்லை என குற்றச்சாட்டு
UPDATED : செப் 15, 2026 10:24 PM
ADDED : செப் 15, 2026 08:14 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 555 அரசு பள்ளிகளில், 500 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மைதானம் மற்றும் உபகரணங்களும் இல்லாததால், மாணவ - மாணவியரின் விளையாட்டுத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் 219 நடுநிலைப்பள்ளிகள், 183 உயர்நிலைப்பள்ளிகள், 153 மேல்நிலைப்பள்ளிகள் என, 555 அரசு பள்ளிகள் உள்ளன.
தமிழக பள்ளிக் கல்வி துறையின் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சார்பில், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், உடற்கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், உடற்கல்வி பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும்.
மாணவர்களின் விளையாட்டு திறனை வளர்க்க, உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலக உடற்திறனாய்வு தேர்வை, 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ -- மாணவியருக்கு நடத்த வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளிலும், மாணவ - மாணவியருக்கு கூட்டாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும்.
மாணவ - மாணவியரை இரு அணிகளாக பிரித்து, அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுகளை விளையாட வைத்து, ஊக்கப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாணவ - மாணவியரையும், பள்ளியில் ஏதாவது ஒரு விளையாட்டில் பங்கேற்க பயிற்சி அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உடற்பயிற்சிக்கான பாட குறிப்புகள், விளையாட்டு உபகரணங்களை மாணவ - மாணவியருக்கு வழங்கி, விளையாட வைத்த பதிவேடு, உடல் திறனாய்வு தேர்வு பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை முறைப்படி பராமரித்து, அதிகாரிகளின் ஆய்வில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 555 அரசு பள்ளிகளில், 50 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், மாணவ - மாணவியரின் விளையாட்டுத்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதோடு, தற்போது விளையாட்டுத்திறனும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதில் குறிப்பாக, ஆண், பெண் இருபாலரும் படிக்கும் பள்ளிகளில், பெண் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லாததால், மாணவியரின் விளையாட்டுத்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானமும், உபகரணங்களும் இல்லாமல், மாணவ - மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர். பல பள்ளிகளில், விளையாட்டு மைதானம் போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
அரசு பள்ளிகளில், மாணவ - மாணவியரின் விளையாட்டுத்திறன் பாதிக்கப்படுவதால், தனியார் பள்ளி மாணவ - மாணவியர் விளையாட்டுத்திறனின் சாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க., அரசின் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சில தினங்களுக்கு முன் நடந்த சட்டசபை கூட்டத்தில், அரசு பள்ளி மாணவ - மாணவியரின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என, பேசினார்.
மேலும், வார பாடவேளைகளில் விளையாட்டுக்கான தனி வகுப்புகள் ஒதுக்கப்பட்டு, மாணவ - மாணவியருக்கு விளையாட்டுத்திறனை கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'அரசிடமிருந்து, திட்டங்கள் குறித்தான உத்தரவு மட்டுமே வருகிறது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன' என கூறினார்.
எனவே, அரசு பள்ளிகளில் ஆண், பெண் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமித்து, விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானம் மோசமான நிலையில் உள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது.
காலிப்பணியிடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், மைதானம் குறித்து, அரசுக்கு தெரிவித்துள்ளோம். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன், பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அரசிடமிருந்து உத்தரவு மற்றும் நிதி ஒதுக்கீடு வந்தவுடன், விளையாட்டு மைதானங்களை சீரமைக்கவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
