sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வனப்பகுதியில் 5 கி.மீ.,க்கு சாலை வசதி இல்லாததால் வீண் அலைச்சல்: அத்தியாவசிய தேவைக்கு 30 கி.மீ., பயணிக்கும் அவலம்

/

வனப்பகுதியில் 5 கி.மீ.,க்கு சாலை வசதி இல்லாததால் வீண் அலைச்சல்: அத்தியாவசிய தேவைக்கு 30 கி.மீ., பயணிக்கும் அவலம்

வனப்பகுதியில் 5 கி.மீ.,க்கு சாலை வசதி இல்லாததால் வீண் அலைச்சல்: அத்தியாவசிய தேவைக்கு 30 கி.மீ., பயணிக்கும் அவலம்

வனப்பகுதியில் 5 கி.மீ.,க்கு சாலை வசதி இல்லாததால் வீண் அலைச்சல்: அத்தியாவசிய தேவைக்கு 30 கி.மீ., பயணிக்கும் அவலம்


UPDATED : நவ 27, 2025 02:11 PM

ADDED : நவ 26, 2025 11:38 PM

Google News

UPDATED : நவ 27, 2025 02:11 PM ADDED : நவ 26, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பிளேஸ்பாளையத்தில் இருந்து நகரிக்கு, 5 கி.மீ., வனப் பகுதியில் சாலை அமைக்காமல், கரடு முரடாக உள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைக்கு கிராம மக்கள், 30 கி.மீ., பயணித்து, திருவள்ளூர், ஊத்துக்கோட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்தில் பிளேஸ்பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்டு பிளேஸ்புரம், அடிசன்புரம், இருளர், அருந்ததியர், செங்குளி கண்டிகை, பிளேஸ்பாளையம் காலனி மற்றும் நரியன்கோனை ஆகிய குக்கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்த ஊராட்சியில், 2011ம் கணக்கெடுப்பின் படி, 1,550க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பிளேஸ்பாளையம், ஆந்திர - தமிழக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து, 5 கி.மீ., பயணித்து, பண்ணுார் என்ற கிராமத்தில் இருந்து ஆந்திர மாநில எல்லை ஆரம்பமாகிறது.

இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாநில வாரியாக எல்லை பிரிக்கப்பட்ட போது, அக்கிராமத்தினர் தமிழக எல்லைக்குள் கொண்டு வரப்பட்டனர்.

இக்கிராம மக்கள் கல்வி, மருத்துவம், பணி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும், திருவள்ளூர், சீத்தஞ்சேரி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இதில், திருவள்ளூர் - 31, ஊத்துக்கோட்டை - 24, சீத்தஞ்சேரி - 15 கி.மீ.,யில் அமைந்துள்ளது. போக்குவரத்து வசதியும், குறிப்பிட்ட நேரத்தில் தான் உள்ளது.

அதே சமயம், ஆந்திர மாநிலம், பண்ணுார், பண்ணுார் சப் - ஸ்டேஷன் ஆகிய பகுதிகள், 15 கி.மீ.,யில் உள்ளது. பண்ணுார் சப் - ஸ்டேஷன் பகுதி சிறு நகரமாக இருப்பதால், அங்கு மளிகை, இறைச்சி கடைகள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வசதி உள்ளது.

அங்கிருந்து, நகரி, பிச்சாட்டூர், திருத்தணி போன்ற பகுதிக்கு, சாலை மற்றும் போக்குவரத்து வசதி உள்ளது. மேலும், நகரியில் அனைத்து வசதியும் இருப்பதால், பிளேஸ்பாளையம் மக்கள், இருசக்கர வாகனம், டிராக்டர் மற்றும் நடந்து, பண்ணுார் சப் - ஸ்டேஷன் சென்று, அங்கிருந்து பேருந்துகளில், பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

ஆந்திர மாநில எல்லையில், பண்ணுார் வரை வனப்பகுதி அனுமதி பெற்று, தரமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பண்ணுாரில் இருந்து பிளேஸ்பாளையத்திற்கு, 5 கி.மீ., வரை, தமிழக வனப்பகுதியில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால், இப்பகுதியில் உள்ள சாலையில் மலை கற்கள் குவிலாக உள்ளன. இந்த கற்குவியலில் ஆபத்தான வகையில், பிளேஸ்பாளையம் மக்கள் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.

மேலும், இந்த கிராம மக்களுக்கு சொந்தமான தோட்டங்களும் பண்ணுார் வரை உள்ளதால், விவசாயிகளும் சிரமப்பட்டு பயணம் செய்கின்றனர். இதனால், அவ்வப்போது விபத்திற்குள்ளாகியும், இரவு நேரத்தில் விஷ பூச்சி கடியாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, பிளேஸ்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:

கடந்த 20 ஆண்டுக்கு முன், பிளேஸ்பாளையத்தில் இருந்து பண்ணுார், சப் ஸ்டேஷன் வழியாக, நகரி, பிச்சாட்டூருக்கு பேருந்து வசதி இருந்தது. ஆனால், தமிழக எல்லையில் சாலை வசதி இல்லாததால், தற்போது அந்த பேருந்தும் நிறுத்தப்பட்டு விட்டது.

திருவள்ளூர், ஊத்துக்கோட்டை செல்ல, 30 கி.மீ., பயணிக்க வேண்டும். அதே சமயம், பண்ணுார் சப் - ஸ்டேஷனிற்கு, 15 கி.மீ., சென்றாலே போதும் என்பதால், நாங்கள் அங்கு தான் பொருட்களை வாங்கி வருகிறோம்.

அல்லிகுழி துணை சுகாதார மையம் இருந்தும், மருத்துவர்கள் அங்கு இருப்பதில்லை என்பதால், மருத்துவ தேவைக்கும், நாங்கள் பண்ணுாருக்கு செல்ல வேண்டியுள்ளது.

மேலும், பண்ணுார் வரை எங்களுக்கு சொந்தமான வயல்கள், தோட்டங்கள் உள்ளன. அங்கு விவசாய பணிகளுக்காக, விவசாயிகளும், விவசாய தொழிலாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போரும், இச்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, தமிழக வனப்பகுதியில், பிளேஸ்பாளையத்தில் இருந்து பண்ணுார் வரை, 5 கி.மீ.,க்கு சாலை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பிளேஸ்பாளையத்தில் இருந்து பண்ணுார் சப் - ஸ்டேஷன் வழியாக பேருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உயர்கல்வி தொடர முடியவில்லை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். அதற்கு மேல் படிக்க போக்குவரத்து வசதியில்லை. மேல்படிப்பு படிக்கவும், பொருட்களை வாங்கவும், 30 கி.மீ.,யில் உள்ள திருவள்ளூருக்கு செல்ல வேண்டும். ஆனால், பண்ணுார் சப் - ஸ்டேஷன் 15 கி.மீ.,யில் அமைந்துள்ளது. அங்கு, பல்வேறு கல்வி நிறுவனங்கள், கடைகள் உள்ளன. சாலையை சீரமைத்தால், உயர்கல்வி பயில்வதற்கு வசதியாக இருக்கும். - சோனியா, 28, பிளேஸ்பாளையம்.


மருத்துவ வசதிக்கு சிரமம் அவசர மருத்துவ தேவைக்கு, பண்ணுார், சப் - ஸ்டேஷன் பகுதியில் தரமான மருத்துவமனை உள்ளது. சப் - ஸ்டேஷனில் இருந்து, ஆந்திர மாநில எல்லை முடியும் வரை சாலை வசதி உள்ளது. ஆனால், தமிழக எல்லையில், 5 கி.மீ.,க்கு மட்டும் சாலை வசதியில்லை. எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, சாலை அமைக்க வேண்டும். - கணேசன், 30. பிளேஸ்பாளையம்.







      Dinamalar
      Follow us