UPDATED : ஜூலை 16, 2026 06:37 PM
ADDED : ஜூலை 16, 2026 06:16 PM
மீஞ்சூர்:வடசென்னை அனல்மின் நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையங்களில், 2,630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு, 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்கள், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:
புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என, அறிவித்துள்ளது.
அதில், அனல் மின் நிலையங்களில் பணியாற்றி வரும் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், அடிப்படை வசதிகள் மற்றும் ஊதிய உயர்வும் வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால், மின் உற்பத்தி பாதிக்கும் வகையில், மிகப்பெரிய அளவிலான போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
