குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண திருத்தணி எம்.எல்.ஏ., அறிவுரை
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண திருத்தணி எம்.எல்.ஏ., அறிவுரை
UPDATED : ஜூலை 09, 2026 03:24 PM
ADDED : ஜூலை 09, 2026 03:10 PM
திருவாலங்காடு;“குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அரி, நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
திருத்தணி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அரி, நேற்று திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, பி.டி.ஓ., அலுவலக மேலாளர்கள் செல்வம், உமா மகேஸ்வரி உள்ளிட்டோர், ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினர்.
அப்போது, எம்.எல்.ஏ., அரி கூறியதாவது:
தாழவேடு, நல்லாட்டூர், சிவாடா பகுதிகளில், குடிநீர் பிரச்னை உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. மக்களும் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
குடிநீர், கால்வாய், சாலை பிரச்னைகள் தொடர்கின்றன. பல கிராமங்களில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஆய்வு செய்து, குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
