/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி பஸ் நிலையத்தில் மொபைல் பறித்தவர் கைது
/
திருத்தணி பஸ் நிலையத்தில் மொபைல் பறித்தவர் கைது
ADDED : செப் 18, 2024 09:10 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சி அலுவலகத்தின் பின்புறம், அண்ணா பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர், திருத்தணி பகுதியில் துணி வியாபாரம் செய்துவிட்டு, ஊருக்கு செல்வதற்காக திருத்தணி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது, இரண்டு மர்ம நபர்கள் திடீரென தியாகராஜனிடம் மொபைல் போனை பறித்துக் கொண்டு அங்கிருந்த கழிப்பறைக்குள் புகுந்தனர்.
தியாகராஜன் சக பயணியர் உதவியுடன், கழிப்பறையில் பதுங்கியிருந்த இருவரையும் பிடித்து, திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சிவராம், 36, மற்றும் 15 வயது சிறுவன் என தெரிந்தது.
மொபைல்போனை பறிமுதல் செய்த போலீசார், சிவராமை கைது செய்தனர். சிறுவனின் பெற்றோரை வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
இரண்டு நாட்களில் மட்டும், திருத்தணி பேருந்து நிலையத்தில், ஏழு மொபைல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த சில தினங்களாக திருத்தணி நகரத்தில் மொபைல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.
இதை தடுத்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.