/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
திருவள்ளூர்: புகார் பெட்டி; இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
திருவள்ளூர்: புகார் பெட்டி; இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
ADDED : நவ 07, 2024 12:59 AM

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
மீஞ்சூர் ஒன்றியம், வேளூர் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டி சேதமடைந்து உள்ளது. தொட்டியின் மேற்பகுதி முழுதும் நீர்க்கசிவு ஏற்பட்டு பலவீனமாகி வருகிறது.
துாண்களில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து, உள்ளிருக்கும் கம்பி துருப்பிடித்து உள்ளது. தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், கிராமவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் குடிநீர் மேல்நிலை தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.ஜி.கிருஷ்ணா, பொன்னேரி.
சாலையோரம் கொட்டப்படும் ஹோட்டல் கழிவுகளால் சீர்கேடு
திருத்தணி பழைய திரவுபதியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வேளாண் தோட்டக்கலை, கால்நடை உதவி இயக்குனர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இச்சாலையில் அதிகளவில் வாகன ஓட்டிகள் மற்றும் அரசு அலுவலகத்திற்கு செல்லும் பயனாளிகள் நடந்து செல்கின்றனர். இந்த நிலையில், தனியார் திருமண மண்டபம் மற்றும் ஹோட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுகளை சாலையோரம் கொட்டுகின்றனர்.
குறிப்பாக, ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வாழை இலைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள், அலுவலக ஊழியர்கள், பயனாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே, நகாரட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.கோதண்டன், திருத்தணி.
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் மின்கம்பத்தில் வளரும் செடி
ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் நெடுஞ்சாலையில், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் மின்கம்பங்களில் செடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன.
தற்போது, மழை பெய்து வரும் நிலையில், புதர்போல் வளரும் நிலை ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மின்கம்பத்தில் வளர்ந்துள்ள செடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எல்.ரவி, பெரியபாளையம்.
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது, பொன்னாங்குளம் கிராமம். இக்கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிவாசிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக, 2002 -- 03ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 30,000 லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தற்போது சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து சேதமடைந்து உள்ளது.
எனவே, சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எல்.மணிகண்டன், பொன்னாங்குளம்.
சாலை பணிகள் இழுபறி எழில்நகர்வாசிகள் காத்திருப்பு
கடம்பத்துார் ஊராட்சி அம்மா நகருக்கு செல்லும் வழியில் உள்ள, எழில் நகரில் 200 மீட்டர் சாலை அமைக்க கற்கள் போடப்பட்டு நான்கு மாதமாக பணி முழுமை பெறாமல் கிடப்பில் உள்ளது. இரவு நேரங்களில் முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை ஒன்றிய நிர்வாகத்தினர் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
- மு.சங்கர், கடம்பத்துார்.
உயர் கோபுர மின்விளக்கு பழுது ஒளிர நடவடிக்கை எடுப்பரா?
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பாலகிருஷ்ணாபுரம் - புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில், உயர் கோபுர மின்விளக்கு பழுதாகி ஒரு மாதமாகி எரியாமல் உள்ளது.
இதனால், அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளதால், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோர் மற்றும் அப்பகுதிவாசிகள் அச்சப்படுகின்றனர். எனவே, அப்பகுதி வாசிகளின் நலன் கருதி, உயர்மின் கோபுர விளக்கை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.பிரசாத், கும்மிடிப்பூண்டி.