/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
54 ஏரிகளை நவீனப்படுத்த முதல்வர் உத்தரவு :திருவள்ளூர், பூந்தமல்லி விவசாயிகள் மகிழ்ச்சி
/
54 ஏரிகளை நவீனப்படுத்த முதல்வர் உத்தரவு :திருவள்ளூர், பூந்தமல்லி விவசாயிகள் மகிழ்ச்சி
54 ஏரிகளை நவீனப்படுத்த முதல்வர் உத்தரவு :திருவள்ளூர், பூந்தமல்லி விவசாயிகள் மகிழ்ச்சி
54 ஏரிகளை நவீனப்படுத்த முதல்வர் உத்தரவு :திருவள்ளூர், பூந்தமல்லி விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 03, 2011 01:20 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி தாலுகாவில், கூவம் வடிநிலத்தில் உள்ள, 54 ஏரிகள் மற்றும் அதன் கால்வாய்களை சீரமைக்க, 22.40 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதால், 200க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவுக்கு உட்பட்ட கேசாவரம் அணைக்கட்டிலிருந்து, கூவம் ஆறு திருவள்ளூர், பூந்தமல்லி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்கள் வழியாகச் செல்கிறது. ஆறு துவங்கும் கேசாவரம் அணைக்கட்டு பகுதியிலிருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில் கூவம் ஆறு உள்ளது. இதில் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்கள் உள்ளன. இந்த ஆற்றுப் பாசனத்தை நம்பி, அதிக கிராமங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளன. கூவம் ஆற்றில் தொடரும் மணல் திருட்டால், தற்போது இந்த ஆறு பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்து, பல விவசாயிகள் தங்களது விளை நிலங்களை, பிளாட் போட்டு விற்று வருகின்றனர். பலர் விவசாயத்தையே மறந்து விட்டனர். மேலும், கூவம் ஆற்றை அளந்து ஆற்றின் இருபுறமும், பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினர் 2009ல் கற்களை நட்டனர்.
ஆனால், ஆற்றின் ஆக்கிரமிப்புகளை ஐகோர்ட் உத்தரவுப்படி அகற்றவில்லை. கூவம் ஆறு துவங்கும் கேசாவரம் அணைக்கட்டு, இடையே உள்ள கொரட்டூர் அணைக்கட்டு ஆகியவையும் பராமரிப்பின்றி உள்ளது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழிலும் படங்களுடன் செய்தி வெளியானது. இந்நிலையில் கூவம் வடிநிலத்தில், பாசனப் பரப்பு கொண்ட, 54 ஏரிகள் மற்றும் அதன் கால்வாய்களை, உலக வங்கி உதவியுடன், 22.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சீரமைக்க முதல்வர் ஜெயலலிதா 31ம் தேதி உத்தரவிட்டார். இதில் மறுகட்டமைப்பு செய்தல், சீர்படுத்துதல், ஏரிக்கரையை பலப்படுத்துதல், நீர் வழங்கும் கால்வாய்களை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், தற்போது பாலைவனமாக உள்ள கூவம் ஆறு சீர் பெறும். இதன் மூலம், 6624.20 எக்டேர் நிலங்கள் õசன வசதி பெறும். முதல்வரின் இந்த உத்தரவால் திருவள்ளூர், பூந்தமல்லி தாலுகாவைச் சேர்ந்த கிராம விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விவசாயிகள் கருத்து: கே.நந்தன், பேரம்பாக்கம்: 'கூவம் ஆற்றுப்பாசனத்தை நம்பி, விவசாயம் செய்து வந்தேன். தற்போது மணல் திருட்டால், ஆறு பாலைவனமாக மாறியதோடு, நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் ஒரு ஏக்கர் நிலத்தை பிளாட் போட்டு விற்றேன். தற்போது கூவம் வடிநிலத்தை புனரமைக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளதால் நிலத்தடி நீர் உயரும் நிலை உள்ளது. இது விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்' என்றார். பாபுஜி, குத்தம்பாக்கம் விவசாயிகள் நல பாதுகாப்பு சங்கத் தலைவர்: 'கூவம் வடிநிலத்தை ஒட்டியுள்ள ஏரிகளை சீரமைக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இத்திட்டத்தினால் பூந்தமல்லி தாலுகாவில், 20க்கும் மேற்பட்ட ஏரிகளில், மழை நீரை அதிகளவில் சேமிக்க முடியும். மேலும், நிலத்தடி நீர் உயர்வதோடு ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், மூன்று போகமும் நிலத்தில் பயிரிட்டு வாழ்வாதாரத்தை பெருக்க முடியும்' என்றார்.