/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தீவிரம்
/
பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தீவிரம்
பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தீவிரம்
பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தீவிரம்
ADDED : ஆக 05, 2011 02:46 AM
ஊத்துக்கோட்டை : தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும், பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்த, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என்ற அமைப்புகளுடன் செயல்படுகிறது.
இதில், 9 மாநகராட்சிகள், 103 நகராட்சிகள், 538 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. தற்போது நகராட்சி பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பெருமளவு உள்ள, பேரூராட்சிகளில் பெருகி வரும் மக்கள் தொகையால் போதுமான அளவு, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் வெளியேறி குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. சிக்-குன்-குனியா, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் ஏற்பட்டு, சில உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்கின்றன.ஆங்காங்கே, இதுபோல் ஏற்படும், சம்பவங்களால் நிரந்தரத் தீர்வு காண முடியாமல், தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதனால் பணம் வீணாவதுடன், நிரந்தரத் தீர்வு ஏற்படாமல் உள்ளது.
இந்நிலையை போக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும், பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது. இத்துறையின் அதிகாரிகள், ஒவ்வொரு பேரூராட்சி பகுதிகளுக்கும் சென்று அப்பகுதியில் உள்ள மக்கள் தொகை, வார்டுகளின் எண்ணிக்கை, பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், செப்டிக்டேங்குகள், தெருக்கள் மற்றும் சாலைகளின் எண்ணிக்கை, தார்சாலை, சிமென்ட் சாலை, கிராவல் சாலை, புறம்போக்கு நிலங்களின் அளவு, மேல்நிலை குடிநீர் தொட்டிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தையும் கணக்கெடுத்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில், ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பேரூராட்சிகள் மற்றும் திருத்தணி நகராட்சி ஆகிய பகுதிகளில், கணக்கெடுப்பு பணிகள் துவங்கி உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, ''தமிழகத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டு, அதற்கானத் திட்டம் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பேரூராட்சி பகுதிகளில், அனைத்து விவரங்களும் சேகரித்து, விரிவான திட்ட மதிப்பீடு சேகரிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். பின்னர் அரசின் உத்தரவுப்படி பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
எம்.யுவராஜ்