/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநில நெடுஞ்சாலை நடுவில் மின்கம்பங்கள்
/
மாநில நெடுஞ்சாலை நடுவில் மின்கம்பங்கள்
ADDED : செப் 22, 2011 12:33 AM
திருத்தணி - மாம்பாக்கசத்திரம் செல்லும் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றும் பணி, துரித வேகத்தில் நடந்து வருகிறது.
ஆனால், சாலையின் நடுவில் மின்கம்பங்கள் இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. சென்னை, திருப்பதி, வேலூர், சோளிங்கர் மற்றும் சித்தூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பஸ், லாரி, கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் திருத்தணி நகருக்கு வருகின்றன. மேலும், மேற்கண்ட ஊர்களில் இருந்து திருத்தணி நகரம் வழியாக காஞ்சிபுரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, அரக்கோணம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கின்றன. வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் திருத்தணி ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இச்சாலைகளை வாகனங்கள் கடப்பதற்கு பல மணி நேரம் ஆவதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.
குறிப்பாக, திருத்தணி அரக்கோணம் சாலையில், 250 மீட்டர் தூரம் கடக்க, அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. திருமண முகூர்த்த நாட்கள் என்றால், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அரக்கோணம் சாலையை கடக்க, குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 2010ம் ஆண்டு அகூர் - மாம்பாக்கசத்திரம் - திருத்தணி செல்லும் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு, அரசு 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அந்த பணிகளுக்கான டெண்டரும் விடப்பட்டு, 75 சதவீதம் பணிகளும் முடிந்துள்ளன. மீதமுள்ள 25 சதவீத பணிகளும் துரித வேகத்தில் நடப்பதால் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி ஓரிரு மாதங்களில் முடிவடையும். இந்நிலையில், மாம்பாக்கசத்திரம் - திருத்தணி செல்லும் மாநில நெடுஞ்சாலையின் நடுவே, 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளன. மேலும், மின்கம்பங்களால் சாலை விரிவாக்கம் செய்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். வாகன ஓட்டிகள், சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்கள் அகற்ற வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இது குறித்து, திருத்தணி மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'மாம்பாக்கசத்திரம் - திருத்தணி மாநில நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்கள் மாற்றுவதற்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்து எங்கள் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மின்வாரிய உயர் அதிகாரிகள் மின்கம்பங்கள் மாற்றுவதற்கு எவ்வளவு தொகை வசூலிக்க வேண்டும் என, தெரிவித்தால் அதை மாநிலநெடுஞ்சாலை துறையினருக்கு அனுப்பி வைப்போம். அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்ட தொகையினை, நெடுஞ்சாலை துறையினர் செலுத்தினால், உடனடியாக சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்கள் மாற்றப்படும்,'' என்றார்.