sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வடிகால் வசதியில்லாததால் தண்ணீரில் மிதக்கும் திருவள்ளூர்

/

வடிகால் வசதியில்லாததால் தண்ணீரில் மிதக்கும் திருவள்ளூர்

வடிகால் வசதியில்லாததால் தண்ணீரில் மிதக்கும் திருவள்ளூர்

வடிகால் வசதியில்லாததால் தண்ணீரில் மிதக்கும் திருவள்ளூர்


ADDED : அக் 22, 2025 10:45 PM

Google News

ADDED : அக் 22, 2025 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

: முறையான வடிகால் வசதியில்லாததால், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி, தண்ணீரில் மிதக்கிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு, தாழ்வாக உள்ள பகுதிகளில், முறையான மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தாததால், மழைக்காலங்களிலும் சிப்காட் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காணாத நிலையில், சில தினங்களாக சிப்காட் வளாகத்தில் உள்ள பல்வேறு சாலைகளில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளது.

குறிப்பாக, வடக்கு சிப்காட் சாலை, தனியார் நச்சு கழிவு மேலாண்மை நிலைய சாலை, அதன் எதிரே, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை உள்ளிட்ட இடங்களில் குளம்போல் மழைநீருடன், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

திருத்தணி திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், 1,550 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில், நெற்பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளன. சிலர் நெல் அறுவடை செய்தும் வருகின்றனர்.

இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், வயல்வெளியில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, பெரியகடம்பூர், சின்னகடம்பூர், கன்னிகாபுரம், எஸ்.அக்ரஹாரம், செருக்கனுார் மற்றும் கிருஷ்ணசமுத்திரம் ஆகிய பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிரில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால், விவசாயிகள் செய்வது அறியாமல் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, திருத்தணி வேளாண் உதவி இயக்குநர் பொறுப்பு பிரேம் கூறியதாவது:

விவசாயிகள் வயல்வெளியில் மழைநீர் தேங்கியிருந்தால், கால்வாய் அமைத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிரில் தண்ணீர் இருந்தால், உடனே வெளியேற்ற வேண்டும். விவசாயிகள் அச்சப்படாமல், நெல்வயலில் இருந்து கால்வாய் அமைத்தும் வெளியேற்றலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கொசஸ்தலை, நந்தியாற்றில் வெள்ளம் செல்வதால், கிராம நிர்வாக அலுவலர்கள், அந்தந்த ஊராட்சிகளில் தங்கி பணிபுரிய வேண்டும் என, திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழி உத்தரவிட்டு உள்ளார்.

ஊத்துக்கோட்டை ஆந்திராவில் உற்பத்தியாகும் ஆரணி ஆறு பிச்சாட்டூர், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி வழியாக, ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் அணைக்கட்டில் தண்ணீர் சேகரமாகிறது. இந்த அணைக்கட்டு, 1989ம் ஆண்டு கட்டப்பட்டது.

அதன்பின், 2014 - 2015ம் ஆண்டு 3.42 கோடி ரூபாயில் கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதில் தண்ணீர் நிறைந்தால், சுற்றியுள்ள 3 கி.மீ.,க்கு நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படும்.

சமீப காலமாக பெய்து வரும் மழையால், அணைக்கட்டிற்கு நீர்வரத்து அதிகரித்து, உபரிநீர் வழிந்தோடுகிறது. இந்நிலையில், சிட்ரபாக்கம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீரில், அப்பகுதி மக்கள் மீன்பிடித்தும், ஜாலியாக நடந்தும் செல்கின்றனர்.

இதுபோன்ற செயல்களால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் எதிர் திசையில் உள்ள சாலை வழியே, பவானி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

இதே சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இச்சாலையோரம் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் செல்ல வழியின்றி குளம்போல் தேங்கியுள்ளது.

ஆர்.கே.பேட்டை ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணை, நேற்று இரவு 7:00 மணியளவில் திறக்கப்பட்டது. இதனால், கொசஸ்தலையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடி புதுாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவாயில் முன் கான்கிரீட் சாலை, மேடு பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி, நுழைவாயிலை ஒட்டி குளம் போல் தேங்கியுள்ளது. குப்பையும், கழிவுநீரும் கலந்துள்ளதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.

பூண்டியில் 4,500 கன அடி நீர் திறப்பு

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம் 35 அடி. ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால், நேற்று காலை நிலவரப்படி 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, நேற்று முதல் 4,500 கன அடி உபரி நீர், நான்கு மதகுகள் வழியாக திறக்கப்பட்டு, கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.



- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us