/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடிகால்வாய் துார் வாராததால் கவுன்சிலர்கள்...ஆவேசம்!:இந்தாண்டும் மிதக்க தயாராகும் திருவள்ளூர்
/
வடிகால்வாய் துார் வாராததால் கவுன்சிலர்கள்...ஆவேசம்!:இந்தாண்டும் மிதக்க தயாராகும் திருவள்ளூர்
வடிகால்வாய் துார் வாராததால் கவுன்சிலர்கள்...ஆவேசம்!:இந்தாண்டும் மிதக்க தயாராகும் திருவள்ளூர்
வடிகால்வாய் துார் வாராததால் கவுன்சிலர்கள்...ஆவேசம்!:இந்தாண்டும் மிதக்க தயாராகும் திருவள்ளூர்
ADDED : ஜூன் 27, 2024 01:12 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், மழைநீர் கால்வாய் துார் வாராததால், வரும் மழைக்காலத்தில் நகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சூழல் உள்ளது என, ஆவேசமாக பேசினர்.
லோக்சபா தேர்தல் காரணமாக, மூன்று மாதங்களுக்கு பின், திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டம், தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ரவிச்சந்திரன், கமிஷனர் திருநாவுக்கரசர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
ராஜ்குமார் தாமஸ் - சுயே.: திருவள்ளூர் நகராட்சி 12வது வார்டு காமாட்சி அவென்யூவில், நகராட்சிக்கு சொந்தமான பூங்கா மற்றும் இணைப்பு சாலையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். போலி ஆவணம் செய்து பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பலமுறை நான் கமிஷனரிடம் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய கமிஷனராவது நடவடிக்கை எடுத்து, பத்திரப்பதிவை ரத்து செய்து பூங்காவை மீட்டெடுக்க வேண்டும்.
மேலும், புங்கத்துார், பத்தியால்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால்வாய் இல்லாததால், மழைக்காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
சீனிவாசன் - சுயே.: 17வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பின்புறம், பொதுப்பணித் துறை கால்வாய் துார் வாரப்படாமல் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் நடப்பாண்டும் திருவள்ளூர் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
செந்தில்குமார் - அ.தி.மு.க.: 24வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர் பகுதி, ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
பாதாள சாக்கடை அமைத்தும், தற்போது வரை பல வீடுகளுக்கு இணைப்பு வழங்கவில்லை.
மேலும், புதிய குடியிருப்புகளில் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்படவில்லை.
மேலும், பல கவுன்சிலர்களும், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் துவங்கி, பெரியகுப்பம், ஐ.ஆர்.என்.அவென்யூ, திருவள்ளூர் அரசு மருத்துவமனை வழியாக காக்களூர் செல்லும் கால்வாய் துார் வாரப்படவில்லை.
ராஜாஜி சாலையில் உள்ள திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் உள்ள கால்வாய், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காக்களூர் வரும் கால்வாய் ஆகியவற்றை பொதுப்பணித் துறையினர் துார் வாரவில்லை.
பெரியகுப்பத்தில் சிறிய மழைக்கே வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது என, சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இதற்கு பதில் அளித்த தலைவர் உதயமலர் பாண்டியன், 'உறுப்பினர்கள் குற்றச்சாட்டு குறித்து கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மழை காலத்திற்குள் அவற்றை துார் வார கலெக்டரிடம் வலியுறுத்தப்படும்' என்றார்.
கூட்டத்தில், நகராட்சிக்குட்பட்ட மூன்று இடங்களில் 18.92 லட்சம் ரூபாய் மதிப்பில் எல்.இ.டி., விளக்கு அமைக்கவும், பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின் மோட்டார்களை சீரமைத்து, தொட்டியை துார் வாரி சுத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், 62 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவாலங்காடு
திருவாலங்காடு கவுன்சிலர் கூட்டம், ஒன்றிய குழு தலைவர் ஜீவா தலைமையில் நேற்று நடந்தது. பி.டி.ஓ.,க்கள் காளியம்மாள், கலைச்செல்வி ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் பெரியகளக்காட்டூர், சின்னம்மாபேட்டை, மணவூர், கனகம்மாசத்திரம் உட்பட 15 ஊராட்சிகளில் சாலை, குடிநீர் மின்மோட்டார், பயணியர் நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என, அப்பகுதி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
அவை தீர்மானங்களாக ஏற்கப்பட்டு மன்ற ஒப்புதல் கோரப்பட்டது. மேலும், நிதி பற்றாக்குறை காரணமாக புதிய பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் 10 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.