'இரட்டை' குப்பை தொட்டிகள்; திருவள்ளூர் நகராட்சி அறிமுகம்
'இரட்டை' குப்பை தொட்டிகள்; திருவள்ளூர் நகராட்சி அறிமுகம்
ADDED : ஜூன் 28, 2026 07:08 AM

திருவள்ளூர்: வணிக பகுதிகளில் குப்பை சேகரிக்க வசதியாக, 'இரட்டை' குப்பை தொட்டிகளை திருவள்ளூர் நகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 450க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
அவற்றில், பஜார் வீதி, திரு.வி.க., பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட், வடக்கு ராஜ வீதி, தேரடி உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன.
வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சேகரமாகும் குப்பையை, அந்தந்த கடை உரிமையாளர்களே சேகரித்து, மறுநாள் நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
ஆனால், தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பயனற்ற பொருட்களை சாலை மற்றும் தெருக்களில் வீசி செல்கின்றனர்.
இதனால், அங்கு சேகரமாகும் குப்பையை அகற்ற, நகராட்சி துாய்மை பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில், பொதுமக்கள் விட்டுச்செல்லும் குப்பையை சேகரிக்கும் வகையில், 'ட்வின்ஸ் பின்' எனப்படும், இரட்டை குப்பை தொட்டிகள் வைக்கப்பட உள்ளன.
இதற்காக, நகராட்சி சார்பில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் 30 இரட்டை குப்பை தொட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அவை அனைத்தும், விரைவில் திருவள்ளூர் பஜார் வீதி, மார்க்கெட் பகுதி, ஜே.என்., சாலை, சி.வி.நாயுடு சாலை உள்ளிட்ட பகுதிகளில், 100 மீட்டருக்கு ஒரு தொட்டி வீதம் அமைக்கப்பட உள்ளதாக, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
