/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டம்: நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி
/
திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டம்: நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி
திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டம்: நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி
திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டம்: நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி
ADDED : ஜன 03, 2025 10:38 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படாததால், கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. 9.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும், நவீன சுத்திகரிப்பு மையம் அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது,'என, நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
திருவள்ளூர் நகராட்சியில், கடந்த, 2008ல், பாதாள சாக்கடைத் திட்டப்பணி, 55 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது. நகரில், 86.97 கி.மீட்டருக்கு குழாய் பதிக்கும் பணி துவங்கி நிறைவு பெற்றது.
கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நகரின் மூன்று இடங்களில் சேகரிக்கப்பட்டு, பின், புட்லுார் ஏரி அருகில், உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவு நீர், புட்லுார் ஏரி வழியாக, கூவம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
தற்போது இம்மையத்தில், பல்வேறு பிரச்னை காரணமாக கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் வழிந்தோடி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நடந்த திருவள்ளூர் நகர் மன்ற கூட்டத்தில், பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படாததால், துர்நாற்றம் வீசி, சுற்றுச்சூழல் பாதிக்கிறது என, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமைவகித்தார். கமிஷனர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
எஸ்.ஹேமலதா சுயே.,: 18 வது வார்டு கணபதி நகர், ராஜிவ் நகர் பகுதிகளில் கழிவு நீர் சாலையில் வெளியேறி வருவதால், குடியிருப்புவாசிகள் கடும் சிரமப்படுகின்றனர். இங்கிருந்து பத்மாவதி நகர் கழிவு நீர் சேகரிப்பு மையத்திற்கு குழாய் அமைக்க வேண்டும்.
எல்.செந்தில்குமார் சுயே.,:திருவள்ளூர் நகராட்சி முழுதும் பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படவில்லை. பாதாள சாக்கடையில் அடைப்பால் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. தேவி மீனாட்சி நகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தினை நவீனமயமாக்க, 9.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் இதுவரை பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், அந்த மையத்தில் உள்ள மோட்டார் பழுது காரணமாக கழிவு நீர் சுத்திகரிக்கப்படால் வெளியேற்றப்படுகிறது. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் பதில் கூறியதாவது:
மழை காலம் முடிந்ததும் சாலைகள் அமைக்கும் பணி துவங்கும். கணபதி நகர் பகுதியில் இருந்து பத்மாவதி நகருக்கு குழாய் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இப்பணி துவங்கும்.
கழிவு சுத்திகரிப்பு மையத்தை நவீனப்படுத்தும் பணியை எடுத்த ஒப்பந்ததாரர் பணியை முடிக்காமல் காலதாமதம் செய்ததால், அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. புதிதாக ஒப்பந்தம் கோரப்பட்டு, விரைவில் பணி ஆணை வழங்கியதும், சீரமைப்பு பணி துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

