மது போதையில் கொலை செய்தோம் கைதான மூவர் பரபரப்பு வாக்குமூலம்
மது போதையில் கொலை செய்தோம் கைதான மூவர் பரபரப்பு வாக்குமூலம்
ADDED : ஆக 27, 2026 07:21 PM
கடம்பத்துார், ஆக. 28–
கடம்பத்துார் பகுதியில், துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை மது போதையில் கொலை செய்ததாக, கைது செய்யப்பட்ட மூவரும், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சி, அகரம் பகுதியைச் சேர்ந்த ரமணி, 55, என்பவர், உடல்நலக் குறைவால், கடந்த 25ம் தேதி உயிரிழந்தார்.
அந்த துக்க நிகழ்ச்சியில், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 26, தரப்பினர் பங்கேற்றனர். அன்று மாலை நடந்த இறுதி ஊர்வலத்தில், நடனம் ஆடும்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், மணிகண்டன் கத்தியால் வெட்டப்பட்டார்.
படுகாயமடைந்த மணிகண்டன், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், கசவநல்லாத்துார் கார்த்திகேயன், 23, பானம்பாக்கம் விஜய் என்ற பார்த்திபன், 26, கடம்பத்துார் கோகுல், 24, ஆகிய மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசாரிடம், கைது செய்யப்பட்ட மூவரும் அளித்த வாக்குமூலம்:
அகரம் பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில், எங்களது நண்பர் தீபக், 26, என்பவர் பங்கேற்றார். இறுதி ஊர்வலத்தின் போது, நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில், தீபக்கை மணிகண்டன் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார்.
இதனால் நாங்கள் மூவரும் சென்று, மணிகண்டனிடம் விசாரித்த போது, எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த நாங்கள், மதுபோதையில் மணிகண்டனை கத்தியால் வெட்டி விட்டு தப்பினோம்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
