/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெள்ளி கட்டிகள் பறிமுதல் மேலும் மூவர் சிக்கினர்
/
வெள்ளி கட்டிகள் பறிமுதல் மேலும் மூவர் சிக்கினர்
ADDED : ஏப் 23, 2025 02:52 AM

மீஞ்சூர், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்திற்கு, கடந்த மாதம் 30ம் தேதி, லண்டனில் இருந்து கப்பலில், இரண்டு கன்டெய்னரில் 39,000 கிலோ எடை கொண்ட, 1,305 எண்ணிக்கையிலான வெள்ளி கட்டிகள் கொண்டு வரப்பட்டன.
இவை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஆய்வு செய்தபோது, ஒரு கன்டெய்னர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 8.96 கோடி ரூபாய் மதிப்புள்ள, 922 கிலோ எடை கொண்ட, 30 வெள்ளி கட்டிகள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின்படி, ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, மூன்று உதவி கமிஷனர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், துறைமுக ஊழியர்கள், பாதுகாவலர்கள், லாரி டிரைவர்கள் என, 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தனர். துறைமுகத்தில் இருந்த 'சிசிடிவி'க்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அதை தொடர்ந்து, மேற்கண்ட வெள்ளி கட்டிகளை திருடிய வழக்கில், ஏற்கனவே ஒன்பது பேரை கைது செய்து, 510 கிலோவை பறிமுதல் செய்தனர். தற்போது, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து, 412 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 922 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் துரித விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசாரை, நேற்று ஆவடி கமிஷனர் சங்கர் பாராட்டினார்.

